அவதூறுப் பிரச்சாரத்தை மக்கள் புறக்கணித்துவிட்டனர்- மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர் எம்.பி.
மாணிக்கம் தாகூர் எம்.பி.
Published on: 

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அவதூறு பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் மக்களின் பேராதரவோடு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

கடந்த 4 மாதங்களாக மாண்புமிகு முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும். த.வெ.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க. கட்டவிழ்த்துவிட்ட அவதூறு பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இந்த இடைத் தேர்தல் வெற்றி என்பது முதலமைச்சர் தலைமையிலான அரசுக்கு மக்கள் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த இரண்டு தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவை தமிழக மக்களின் பிரதிபலிப்பாக கருத வேண்டும். தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஒரு இடைத் தேர்தலை பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிற முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.” என்று மாணிக்கம் தாகூர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com