மேகதாது அணை... நயினார் ஒப்புதல் வாங்கித் தருவாரா?- மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
Published on

மேகதாது அணை கட்ட வலியுறுத்த மாட்டோமென கர்நாடக பா.ஜ.க. தலைவரிடம் நயினார் நாகேந்திரனால் ஒப்புதல் பெற்றுத் தர முடியுமா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கேட்டுள்ளார்.

இரண்டு பேருமே சில நாள்களாக, அறிக்கைப் போர் நடத்திவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கேட்டுள்ளார்.

”மேகதாது அணை பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நாடகம் நடத்துவது மோடி அரசுதான்

‘கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட, ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம், அணை கட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்" என்று நான் கூறியதை, தமிழ்நாடு பாஜக தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் கேலியும், கிண்டலுமாக விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டில் குற்றுயிரும், குலையுயிருமாக இருந்த பாஜக, கடந்த மே மாதம் 4-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இருந்த இடம் தெரியாத அளவுக்கு காணாமல் போய் விட்டது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும், சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில், சொந்த செல்வாக்கால் பாஜக சார்பில் போட்டியிட்டவர் சட்டப்பேரவைக்குள் நுழைந்திருக்கிறார். அவரும் எப்போது அண்ணாமலை பக்கம் தாவுவார் என்பது தெரியவில்லை.

தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாத பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு, கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கருத்தை நயினார் நாகேந்திரன் கிண்டலடித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் கைகொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆண்டாலும், பாஜக ஆண்டாலும் காவிரி நதி நீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் குரலை அவர்கள் பொருட்படுத்துவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடந்தபோது முதலமைச்சராக இருந்த திரு. எடியூரப்பா, திரு. பசவராஜ் பொம்மை போன்றவர்கள், ‘மேகதாது அணையை கட்டியே தீருவோம். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மாட்டோம்" என்று முழங்கியதையெல்லாம் நயினார் நாகேந்திரன் மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். மேகதாது அணை கட்ட வலியுறுத்தி, தமிழ்நாடு எல்லை வரை வந்து எடியூரப்பா போராட்டம் நடத்தியதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவிலை.

நதிநீர் விவகாரம் உள்பட இரு மாநிலங்களுக்கு இடையிலான எந்தப் பிரச்னையையும், சுமூகமாக தீர்க்க வேண்டியது ஒன்றிய அரசின் பொறுப்பு. பிரதமரின் கடமை. ஆனால், அந்த கடமையை செய்யாமல் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய பாஜக அரசு நடத்தி வருகிறது. அதனால் தான் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.

"தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையையும் கட்டக் கூடாது" என்று காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன. அதன் பிறகும், மேகதாது அணை கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, பிரச்னைக்கு சுமூக தீர்வு காணாமல், இரு மாநிலங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அரசியல் நாடகத்தை மோடி அரசு அரங்கேற்றி வருகிறது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜ{ன கார்கே ஆகியோர் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தான், இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பது நயினார் நாகேந்திரனுக்கு நிச்சயம் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால், பாஜகவில் இருப்பதால் பொய் பேசும் கலை அவருக்கு இயல்பாகவே வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு. மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு காங்கிரஸ் எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ‘திரு. ராகுல் காந்தியும், திரு. மல்லிகார்ஜ{ன கார்கேவும் மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும்" என்று கூறும் நயினார் நாகேந்திரனால், ‘தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் என்பதால் மேகதாது அணை கட்ட வலியுறுத்த மாட்டோம்" என்று கர்நாடக மாநில பாஜக தலைவரிடம் ஒப்புதல் பெற்று தர முடியுமா? கண்டிப்பாக இது சாத்தியமில்லை என்கிறபோது நயினார் நாகேந்திரன் எதற்கு வெற்றுக் கூச்சல் போடுகிறார் என்பது தெரியவில்லை. காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு யார் நல்லது செய்கிறார்கள், யார் துரோகம் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான், காங்கிரஸ் கட்சியை அதிகாரத்தில் பங்கு பெற வைத்திருக்கிறார்கள், பா.ஜ.க.வை ஓடஓட விரட்டி அடித்திருக்கிறார்கள். இதை உணர்ந்து நயினார் நாகேந்திரன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக த.வெ.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை நயினார் நாகேந்திரன் சுமத்தியிருக்கிறார். அயோத்தி ராமர் கோயில் காணிக்கையை சங்பரிவார கும்பல் திருடியது நாடு முழுவதும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஊழல் பற்றி பாஜக தலைவர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது. எனவே, ஊழல் பற்றி பேசும்போதெல்லாம் பாஜக தலைவர்கள் தங்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் அசிங்கப்பட்டுப் போவீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” என்றும் மாணிக்கம் தாகூரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com