மெரினா கடற்கரைக்குச் செல்ல தற்காலிக தடை... தி.மு.க. பாணியில் த.வெ.க.!

Marina Beach
மெரினா கடற்கரை
Published on

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் சில நாள்களாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

டெல்லியில் தொடங்கிய போராட்டம், தற்போது நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, மயிலாடுதுறை உட்பட்ட பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்திய மாணவர் சங்கத்தினர் பல இடங்களில் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில், மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை இருக்கும் அனைத்து நுழைவாயில்களையும் காவல்துறையினர் மூடியுள்ளனர்.

மேலும், கடற்கரைச் சாலையில் இரண்டு துணை ஆணையர்கள் தலைமையில் 200 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் சில மாணவர் போராட்டங்களின்போது மெரினா கடற்கரை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com