கல்பனா, பி.எம்.சரவணன்
கல்பனா, பி.எம்.சரவணன்

அடுத்தடுத்து 2 மேயர்கள் ராஜினாமா! - பின்னணி என்ன?

கோவை, நெல்லை மாநகராட்சிகளின் இரண்டு திமுக மேயர்கள் நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்திருப்பதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியின் முதல்பெண் மேயர் என்ற பெருமையைப் பெற்றவர் கல்பனா ஆனந்தகுமார். இவர் மேயராக பொறுப்பேற்றது முதலே அவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக கூறப்படுகிறது. இது மாநகராட்சி கூட்டத்திலும் எதிரொலித்ததாகத் தெரிகிறது.

மேலும், மக்களவை தேர்தல் பணிகளில் மேயர் செயல்பாடுகள் சரியில்லாததால், அண்ணாமலைக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அவர் மாற்றப்படுவார் என்ற தகவலும் பரவின.

அதேபோல, கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார். இவர் ஒப்பந்தங்கள், திட்டப் பணிகளில் தலையிடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இந்த நிலையிலேயே, கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, தனது உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் நேற்று ஒப்படைத்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறும்போது, ‘‘உடல்நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக மேயர் தெரிவித்துள்ளார். வரும் 8-ம் தேதி சிறப்பு மன்றக் கூட்டம் நடத்தப்பட்டு, அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்’’ என்றார்.

இதேபோல, நெல்லை மேயர் பி.எம்.சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அனுப்பியுள்ளார்.

மேயர் சரவணனுக்கும் கவுன்சிலருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டதால் மாநகராட்சி கூட்டம் ஒழுங்காக நடத்தப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பலமுறை பேச்சு நடத்தியும், பிரச்சினை தீரவில்லை. இந்த விவகாரத்தில் அப்துல் வகாபின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடரும் பனிப்போர் எதிரொலியாக, மேயர் பதவியை சரவணன் தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

கோவை, நெல்லை மேயர்களின் செயல்பாடுகளில் திமுக தலைமை அதிருப்தி அடைந்ததாகவும், தொடர் புகார்கள் காரணமாக, இருவரையும் ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாகவும், இதன் காரணமாகவே இருவரும் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்குப் பிறகு, மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com