தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகல் ஏன்?- ம.தி.மு.க. விளக்கம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
Published on

ம.தி.மு.க.வின் 32 ஆவது பொதுக்குழு, அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.

பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உட்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தில், தி.மு.க.கூட்டணியிலிருந்து விலகுவது எனக் கூறப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மான விவரம்:

” மறுமலர்ச்சி திமுக, 2017 டிசம்பர் 3 ஆம் தேதி நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த ஒன்பது வருடங்களாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து வந்தது.

தமிழ்நாட்டில் மதவாத அரசியல் சக்திகளை காலூன்ற விடாமல் தடுப்பதற்கும், திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியக் கோட்பாடுகளைத் தகர்ப்பதற்கு விடப்படும் அறைகூவல்களை முறியடிக்கவும் மறுமலர்ச்சி திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொள்கை அடிப்படையில் இடம் பெற்று இருந்தது.

கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவ அடையாளத்தையும், 32 ஆண்டு கால தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்ட செயல்பாடுகளையும் நீர்த்துப்போக செய்யும் முயற்சிகள் கூட்டணியில் மேற்கொள்ளப்பட்டபோதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, எடுத்த முடிவில் உறுதியாக இருந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம்.

தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மே 1 ஆம் தேதி கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பத்திரிக்கை ஊடகங்களில் தீர்க்கமாக கூறியவாறு தமிழ்நாடு அரசியலில் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பேராதரவை வழங்கி இருந்தனர்.

தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அரசியல் களத்தில் நடைபெற்ற திரை மறைவு பேரங்கள், மக்கள் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக இருந்ததை அனைவரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்துத்துவ மதவாத சக்திகளோடு கரம் கோர்த்துக் கொண்டு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில், வெறும் 47 இடங்களில் வெற்றி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த இரகசியமே; இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கை கூட்டணி என்று பிரகடனம் செய்யப்பட்டதெல்லாம், சில அக்கறை உள்ள சக்திகளால் பொருளற்றதாக ஆக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில், ம.தி.மு.க. இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். எனவே தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக்கொள்வது என்று பொதுக்குழு முடிவு செய்கிறது.

தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கழகம் மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.”

logo
Andhimazhai
www.andhimazhai.com