அரசு கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் எம்.எட். பயில்வதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை:
"அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 முதல் நடைபெற்று வருகிறது.
இதற்காக மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்தக் காலஅவகாசம் கடந்த 20.08.2026 உடன் முடிவடைந்தது.
இந்நிலையில், மாணாக்கர் நலன் கருதி விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணாக்கர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 31.08.2026 முதல் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர் இரண்டாம் கட்டச் சேர்க்கைக்கு, தொடர்ந்து விண்ணப்பிக்க 10.09.2026 வரை கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20.08.2026 வரை விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு தர வரிசையின் அடிப்படையில் மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் தொடங்கி நடைபெறும். எம்.எட். மாணாக்கர்களுக்கான வகுப்புகள் 01.09.2026-ல் தொடங்கும். மேலும் விண்ணப்பித்த மாணாக்கர்களுக்கு சேர்க்கைக்கான விவரங்கள் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்படும்." என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.