ஆணினமே... இது என்ன சோகம்? பெண்களை விட அதிக எண்ணிக்கையில் ஆண்கள் மரணம்!

உயிரிழப்பு (கோப்புபடம்)
உயிரிழப்பு (கோப்புபடம்)
Published on: 

தமிழ்நாட்டில் கடந்த 2025 ஆம் ஆண்டில் பெண்களின் உயிரிழப்புகளை விட ஆண்களின் உயிரிழப்புகள் 1.10 லட்சம் அதிகம் என்றும், உயிரிழந்தவர்களில் 86 % பேர், 65 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

"ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதற்காக கூறப்படும் காரணங்களில் பெரும்பாலானவை மதுப் பழக்கத்துடன் தொடர்புடையவை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டில் பிறப்பு, இறப்பு விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் காலாண்டு இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 93.207 என்றும், அவற்றில் ஆண்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 1860, பெண்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 91,347 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உயிரிழந்தவர்களில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை 1,10.513 பேர் அதிகமாகும். அதுமட்டுமா? உயிரிழந்த ஆண்களில் 86%, அதாவது 94,792 பேர் 15 முதல் 64 வயது வரையிலானவர்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டுமின்றி, 2024 ஆம் ஆண்டில் 1.07 லட்சம் ஆண்களும், 2023 ஆம் ஆண்டில் 1.07 லட்சம் ஆண்களும் கூடுதலாக உயிரிழந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

ஆண்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பதற்காக கூறப்பட்டுள்ள 4 காரணிகளுக்குமே மூல காரணம் மதுப்பழக்கம் தான் என்பது ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளில் சாலை விபத்துகள், தற்கொலைகள் ஆகியவற்றில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கான முதன்மைக் காரணம் மதுப்பழக்கம் தான் என்று குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது வணிகத்தால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கிறது என்றாலும், அதனால் ஏற்படும் இழப்புகள் மிகவும் அதிகமாகும். மதுவுக்கு அடிமையாவதால் ஏற்படும் மனிதவள பாதிப்புகள் காரணமாக மட்டும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 30% பாதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆண்களின் உயிரிழப்பு அதிகரிப்பதற்கான காரணங்களை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய, மதுவின் கேடுகள் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

அதனடிப்படையில் இப்போது தொடங்கி ஆண்டுக்கு 1000 மதுக்கடைகளை மூடி, அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் முழு மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்." என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com