முதலமைச்சர் மு.க.ஸ்டாலொன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலொன்

ரூ.25,000 கோடி வணிகர் நிலுவை - தமிழக அரசு புதிய தள்ளுபடித் திட்டம்!

தமிழகத்தில் வணிகர்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய 25 ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க புதிய சமாதானத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

முன்னதாக, மாநில அரசின் வணிக வரிச் சட்டம், மதிப்புக் கூட்டல் வரிச் சட்டம் ஆகியவை மாற்றப்பட்டு, 2017ஆம் ஆண்டு முதல் சரக்கு சேவை வரி- ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தது. பழைய சட்டங்களின்படி மாநில அரசுக்கு வணிகர்கள் நிலுவைத் தொகை செலுத்தவேண்டியுள்ளது. அதற்குத் தீர்வாக இப்போது புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது.

பேரவையில் முதலமைச்சர் பேசுகையில், “தமிழ்நாடு அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடர்பாக 2,11,607 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட வணிகர்கள், வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 1,42,569. இதில் நிலுவையாக உள்ள தொகை 25,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவைத்தொகை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதல் முறை எனக் குறிப்பிட்ட அவர், ”அரசின் இந்த முடிவால் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 502 சிறு வணிகர்கள் தமது நிலுவைத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பலனடைவார்கள்.” என்றார்.

இந்த வணிகர்கள் தவிர மற்ற வணிகர்கள், நிறுவனங்கள், ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம், ரூ.10 லட்சம் முதல் ரூ. 1 கோடி, ரூ. 1 கோடி முதல் ரூ. 10 கோடி, ரூ.10 கோடிக்கு மேலாக நிலுவையில் உள்ளவர்கள் - என நான்கு வகைகளாகக் கொண்டுவரப்பட்டு வரிநிலுவை தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இந்தத் திட்டத்தின் மேலும் ஒரு முக்கியச் சலுகையாக, நிலுவைத் தொகையைச் செலுத்த முன்வரும் நாள்வரை அவர்களது கணக்கில் ஏற்றப்பட ஏதுவான திரண்ட வட்டித் தொகையும் (Accrued Interest) முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். இந்தத் திட்டம் வரும் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். நான்கு மாத காலம் நடைமுறையில் இருக்கும்.” என்றும் முதலமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com