சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ’மெட்ரோ மேனர்ஸ் - பொறுப்பான பயணம், பாதுகாப்பான பயணம்’ எனும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடத்தியுள்ளது
பயணிகள் பாதுகாப்பாகவும், பண்போடும், ஒழுக்கத்தோடும் பயணம் செய்வதை ஊக்குவிக்கவும், அவர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் “மெட்ரோ மேனர்ஸ் - பொறுப்பான பயணம், பாதுகாப்பான பயணம்" (Metro Manners – Smart Travel, Safe Travel) என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி வரிசையாகச் செல்வதற்கும், அவர்களின் பயணம் மகிழ்ச்சிகரமாக அமைவதற்கும் தேவையான எளிய பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதே இந்தத் பிரச்சாரத்தின் நோக்கமாகும்.
பொறுப்பான பயணிகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த இந்நிகழ்ச்சியில் மெட்ரோ பயணிகள், தன்னார்வலர்கள், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பணியாளர்கள் எனப் பல தரப்பினரும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இவர்கள் 10.06.2026 முதல் 12.06.2026 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் பயணிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்பான பயண முறைகளை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினர்.
முக்கிய விதிமுறைகள்:
• இறங்குபவர்களுக்கு முன்னுரிமை: இரயிலில் ஏறுவதற்கு முன், உள்ளே இருக்கும் பயணிகள் முதலில் கீழே இறங்க வழிவிடுங்கள்.
• இரயில் கதவுகளை அடைக்காதீர்கள்: இரயில் கதவுகளுக்கு அருகில் நின்று கொண்டு, பயணிகள் வந்து செல்வதற்குத் தடையாக இருக்காதீர்கள்.
• மஞ்சள் கோட்டைத் தாண்டாதீர்கள்: நடைமேடையில் இரயிலுக்காகக் காத்திருக்கும்போது, பாதுகாப்பு மஞ்சள் கோட்டைத் தாண்டி நிற்க வேண்டாம்.
• நகரும் படிக்கட்டு விதிமுறை: நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்தும்போது, மற்றவர்களுக்கு வழிவிடும் வகையில் "இடப்பக்கம் நில்லுங்கள், வலப்பக்கம் நடங்கள்" (Stand Left, Walk Right) என்ற முறையைப் பின்பற்றுங்கள்.
• ஹெட்போன்களைப் பயன்படுத்துங்கள்: இரயிலில் பயணிக்கும்போது பாடல்கள் கேட்பதற்கோ அல்லது வீடியோக்கள் பார்ப்பதற்கோ கட்டாயம் ஹெட்போன்களை (Headphones) பயன்படுத்துங்கள்.
இந்தத் திட்டம் அடுத்தடுத்த கட்டங்களாக மற்ற மெட்ரோ நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.