எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர். குறித்து சர்ச்சைப் பேச்சு: ஆ.ராசாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆ.ராசாவின் வாடிக்கை.” என்று எம்ஜிஆர் குறித்த திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். என்றும் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற மறைந்த முதல்வர் எம்ஜிஆர் குறித்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆ.ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும். தரம் தாழ்ந்த திமுக அளவுக்கு அதிமுக என்றும் தரம் தாழாது.

இந்த திமுக ஆட்சியில், எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும், அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆ.ராசா போன்றோர் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.

வரலாறு நெடுக எங்கள் இருபெரும் தலைவர்களை பிம்பச்சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்துள்ளன. அதேபோல, இனிவரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் அவர்களது புகழை எள்ளளவும் குறைக்கமுடியாது. வருகின்ற மக்களவைத் தேர்தலில் ஆ.ராசாவுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். கல்லை வடித்தால் அது வெறும் சிலை- அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com