சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பொதுமக்களைக் கடிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது செய்தியாக வெளியாகின்றன.
வளர்ப்பு நாய்களுக்கு கண்டிப்பாக உரிமம் பெற வேண்டும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும், மேலும் வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயம் போன்ற விதிமுறைகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றுவதில்லை. மேலும், சிலர் தங்களுடைய நாய்களை பராமரிக்க இயலாத நிலையில் தெருக்களில் அப்படியே விட்டுவிடுகின்றனர்.
இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்க்க, வளர்ப்பு நாய்களின் உடலில் மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவதை கட்டாயமாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் சிப் பொருத்தாத நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.