
இந்தியாவில் பால்பொருட்களை விற்பனை செய்துவரும் மதர் டெய்ரி நிறுவனம் நாட்டிலேயே முதல் முறையாக மக்கும் பால் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. மதர் டெய்ரி, மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இன்று (ஜுன் - 5) உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் "இயற்கையால் உத்வேகம் — காலநிலைக்காக, நம் எதிர்காலத்திற்காக." இதனை முன்னெடுக்கும் வகையில், இந்நிறுவனம் 4 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு மக்கும் பால் பாக்கெட்டுகளை தயாரித்துள்ளது. இவை மைக்ரோ பிளாஸ்டிக் எச்சங்களை விட்டுச்செல்லாமல், இயற்கையான மெழுகு போல மாறி மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைக்கப்படுகின்றன.
இதுகுறித்து மதர் டெய்ரி மற்றும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் மீனேஷ் ஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த இயற்கையாக மக்கும் பால் பாக்கெட்டுகளுக்காக நுகர்வோரிடம் இருந்து எவ்விதக் கூடுதல் தொகையும் வசூலிக்கப்பட மாட்டாது. பழைய பாக்கெட்டுகளின் அதே விலையிலேயே இவை விநியோகிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
முதற்கட்டமாக, இதன் விநியோகம் டெல்லி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க இதுபோன்ற பெருநிறுவனங்கள் பங்கு எடுத்துக்கொள்வது பாராட்டுக்குரியது.