தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்- ஆளுநர் சொன்னதென்ன?: அமைச்சர் ஆதவ்

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
Published on

பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் இன்று தலைமைச் செயலக பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்திலுள்ள கூட்ட அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் அளித்த பேட்டி:

”இன்றைய தினம் வரலாற்றில் ஒரு பொன்னான நாள். இன்றைய தினத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தமிழக வெற்றிக் கழகத்தினுடைய வெற்றி நாளாக வரலாற்றில் நாங்கள் பதிவு செய்கிறோம். பெரியார் அவர்கள் கனவு கண்ட, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கனவு கண்ட, பேரறிஞர் அண்ணா அவர்கள் கனவு கண்ட சமூகநீதி, மதச்சார்பற்ற ஒரு அமைச்சரவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் என்ன பெரிய வெற்றி, வெற்றி என்று எதிர்க்கட்சியினர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் பணபலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறது. சாதியின் அடிப்படையில் ஏற்படுத்திய தேர்தல் அரசியலை மக்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள். சி. ஜோசப் விஜய் என்று சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டு மத 

அரசியலை தூக்கியெறிந்திருக்கிறார் எங்களுடைய தலைவர். எல்லோருக்குமான ஒரு முதல்வராக எல்லா மதமும் எல்லா சாதிகளும், இளைஞர்களும் பெண்களும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியபொழுது எங்களுடைய தலைவர் முதல் மாநாட்டில் சொன்னது போல, அதற்குப் பிறகு என்னுடைய தனிப்பட்ட ஒரு முழக்கமாகக்கூட ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று நான் சொன்னேன். தமிழக வரலாற்றில் இவையெல்லாம் சாத்தியமா? என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மிகுந்த குறைத்து மதிப்பீடு செய்து எங்கள் தலைவரையும் தமிழக வெற்றிக்கழகத்தையும் தேர்தலுக்கு முன்பு பார்த்தார்கள்.

தேர்தல் அரசியலில் முதல் மாநாட்டில் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ, ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு, எல்லா கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம், எல்லா சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் – இதைத்தான் பெரியார் அவர்கள் கனவு கண்டார். அது மாதிரி, இன்றைக்கு இந்தியாவிலேயே இல்லாத அளவில், ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் யார் யாரெல்லாம் கட்சிக்கு உறுதியாக உழைத்தார்களோ, எந்தவிதமான சாதிப் பின்புலத்தைப் பார்க்காமல், எந்தவிதமான குடும்பப் பின்புலத்தைப் பார்க்காமல் இளைஞர்களுக்கான ஒரு அமைச்சரவையை எங்களுடைய தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிலேயே ஒரு சிறந்த எடுத்துக்காட்டான அமைச்சரவையை, இந்தியாவே பார்த்து பிரமிக்கக் கூடிய ஒரு அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறார். அதில், 8 தலித் சகோதரர்கள் முக்கிய துறைகளில் இன்றைக்கு தங்களுடைய பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள் 
108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலம் இல்லையென்றால் குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடும், ஆளுநர் ஆட்சி வந்துவிடும் என்ற ஜனநாயக கடமையின் ஒரு முக்கியமான பங்கெடுப்பாக காங்கிரசின் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், மாநில தலைவர்கள் ஒருங்கிணைந்து முதல் ஆதரவைக் கொடுத்து, கம்யூனிஸ்ட் தோழர்கள், மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திரு. பேபி அவர்கள், மாநிலச் செயலாளர் திரு. சண்முகம் அவர்கள், தோழர் வீரபாண்டி அவர்கள், அதற்கு பிறகு என்னுடைய ஆசான் 
திரு. தொல். திருமா அண்ணன், ஐ.யூ.எம்.எல் கட்சியின் பெரியவர் திரு. காதர் மொகைதீன் அவர்கள் ஒரு ஜனநாயகக் கடமையுடன் ஆட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தாலும், எங்களுடைய தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்ன வாக்குறுதிகளின்படி ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்கின்ற உறுதியுடன் அனைத்துத் தோழமை கட்சிகளுக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார், அதற்கு பிறகு என்னுடைய பேட்டியை நான் கொடுத்திருந்தேன், பொதுவெளியில் அழைப்பு விடுத்திருந்தோம். அதை ஒவ்வொரு கட்சியின் உயர்மட்ட குழுவுடன் கலந்தாலோசித்து காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களும் (சுமார் 
59 வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இன்றைக்கு அமைச்சர்கள் உருவாகியிருக்கிறார்கள்). அதற்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களின் 30 வருட முழக்கமான
“ஒரு அதிகாரம் ஒருவரிடம் மட்டும்தான் இருக்க வேண்டுமா?” என்று முதன்முதலில் 1999ல் ஐயா மூப்பனார் அவர்கள் இருந்தபொழுது குரல் எழுப்பினார்.

ஐ.யூ.எம்.எல் 1948ல் உருவாக்கப்பட்ட இயக்கம், 75 வருட பாரம்பரிய இயக்கம். ஆனால், இன்று வரையிலும் முன்பிருந்த அரசுகள் இசுலாமிய சகோதரர்களுக்கும் கிருத்துவ சகோதரர்களுக்கும் எந்தவிதத்திலும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்தது கிடையாது. தன்னுடைய கட்சியில் இருப்பவர்களுக்கு பெயரளவிற்கு அதிகாரமில்லாத துறைகளை ஒதுக்கி சமூக நீதி இல்லாத ஒரு அரசை உருவாக்கியிருந்தார்கள். ஆனால், இன்றைய நாளை உண்மையான சமூக நீதி நாளாக நாங்கள் பார்க்கிறோம். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பிற்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அண்ணன் திருமாவளவன் அவர்களையும், பெரியவர் காதர் முகைதீன் அவர்களையும் பார்த்து இன்றைக்குத்தான் நான் மனநிறைவோடு இருக்கிறேன்; இந்த அமைச்சரவை இன்றைக்குத்தான் முழுமை பெற்றதென்று தனது அன்பைப் பகிர்ந்து கொண்டபோது எல்லோருக்கும் உணர்ச்சிபூர்வமான நல்ல ஒரு நேரமாக, தருணமாக இருந்தது. எங்களைப் பொறுத்தவரை இன்றைக்கு பெரியார் கனவு கண்ட, புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்ட உண்மையான ஒரு சமூக நீதி நாள் - இன்றைக்கு தான் முழுமை பெற்றிருக்கிறது.

நாங்கள் தேர்தலுக்காக வேலை செய்ததிலிருந்து, இன்றைக்குத்தான் ஊடகங்கள் இவர் இந்த சாதி, அவர் அந்த சாதி என்று விவாதிக்கின்றார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை வேட்பாளர்களை நியமித்தபோதும், தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோதும், ஊடக நண்பர்களுக்கும் மக்களுக்கும் தெரியும், மக்கள் சாதியின் அடிப்படையில் ஓட்டு போடவில்லையென்று. இந்துசமய அறநிலையத் துறைக்கு இந்த சாதியில் இருந்து போட்டிருக்கின்றார்கள் என்று எதிர்க்கட்சியினர் தவறாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். திரு. ரமேஷ் அவர்களுடைய சாதி குறித்து எங்களுக்குத் தெரியவே தெரியாது. தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை எல்லோரும் இளைஞர்கள், பெண்கள் அதிகம், சாதி உணர்வின் அடிப்படையில் எப்போதும் தேர்தலை எதிர்கொண்டது கிடையாது.

தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பும், மூன்று வருடத்திற்கு முன்பும் பார்த்திருப்பீர்கள், தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறவே பெறாது, அவர்களின் தலைவர் முதலமைச்சராகமாட்டார் என்று எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிட்டு இருந்தார்கள். ஆனால், இளைஞர்களாகிய நாங்கள் தேர்தல் அரசியலில், கட்சியின் பிரச்சாரத்தில் எல்லோரும் கடுமையாக உழைத்தோம். உழைத்தவர்கள் இன்னும் இலட்சக்கணக்கில் இருக்கின்றனர். எனவே, தலைவர் அவர்கள் எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அவரவர்களுடைய உழைப்புக்கேற்றவாறு அவரே முழுமனதுடன் அனைவருக்குமான வாய்ப்பை வழங்கியுள்ளார்.

பழைய தேர்தல் அரசியலில் இருக்கக்கூடிய திமுகவும் அதிமுகவும் தெரிவிக்கக்கூடிய சாதி, மதம் என்ற அரசியலையெல்லாம் தமிழக மக்கள் தூக்கியெறிந்துவிட்டார்கள். ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு நிர்வாகியும், காவல்துறை நிர்வாகிகளும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளும் மதசார்பற்ற கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் நேர்மையான முடிவெடுக்க வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த அரசும் அதுபோன்ற முடிவைத்தான் எடுக்கும். மீண்டும் பதிவு செய்துகொள்கிறோம் - இந்த அரசு பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொள்கையின் வழிதான் நடக்கும். அதற்காகத்தான் தேர்தல் அரசியலில் தனிப்பெரும்பான்மை இல்லாதபோது அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால் சுலபமாக நாங்கள் அரசமைத்திருப்போம்.

இந்த அரசு மதசார்பற்ற கொள்கைகளில், சமூக நீதிக் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு தோழமை கட்சிகளிடமும் நாங்கள் உருவாக்கினோம். இதை காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களிடம் வெளிப்படுத்தினோம், அதை அவர் முழுமையாக நம்பினார். எங்கள் முதல்வர் அவர்களும் அவரும் ஒரு சகோதரர் போன்ற ஒரு உறவை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்களிடமும் மதச்சார்பற்ற கொள்கையை பற்றி ஒரு நீண்ட விவாதத்தை உருவாக்கினோம். இது அதிகாரத்திற்கோ, பண பலத்திற்கோ  உருவாக்கிய கூட்டணி கிடையாது. பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அவர்களிடம் ஒரு நீண்ட விவாதத்துடன் அவருடன் இருக்கக்கூடிய தோழர் ரவிக்குமார் அண்ணன், தோழர் சிந்தனைச்செல்வன் அண்ணன் அவர்களிடமும் என எல்லோரிடமும் எந்தளவிற்கு இந்த அரசு மதச்சார்பற்ற கொள்கையிலும் சமூக நீதிக் கொள்கையிலும் உருவாகியிருக்கிறது என்பதை விளக்கினோம்.

ஐ.யு.எம்.எல் ஏறக்குறைய 60 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தார்கள். ஏன் இசுலாமிய சகோதரர்கள் அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும்? இஸ்லாமிய சகோதரர்களின் பொருளாதார பின்புலம் மிக, மிக, மிக வறுமையான பின்புலம். அனைத்து சமூகங்களும் முன்னேறினாலும் மைனாரிட்டி என்று சொல்லக்கூடிய இசுலாமிய, கிருத்துவ சகோதரர்களாகட்டும், பெண்களாகட்டும், தலித் சகோதரர்களாகட்டும் இவர்களுக்கு நேர்மையின் அடிப்படையில் அரசு முக்கியமான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வரும்போது, இசுலாமிய சகோதரர்களுடைய பிரச்னைகளை சிறுவயதிலிருந்தே உணர்ந்த ஒரு சகோதரர் அமைச்சராகும்போது அந்தத் திட்டங்களில் கண்டிப்பாக ஒரு மாற்றம் கொண்டு வருவார். எடுத்துக்காட்டாக, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை என எனக்குப் பொறுப்பு கொடுத்தாலும் விளையாட்டுத் துறையை எனக்கு கொடுத்தபோது - பத்து வயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் நான் இருக்கிறேன் - போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டுமென்றால் விளையாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அந்த துறையை முதலமைச்சர் அவர்கள் எனக்கு கொடுத்திருக்கின்றார். அது மாதிரி எந்தெந்தத் துறைகளை எவரிடம் கொடுத்தால், வாய்ப்புகளைக் கொடுத்தால் மக்களிடம் அவர்கள் 24 மணி நேரமும் கவனம் செலுத்துவார்கள் என்ற ஒரே ஒரு விஷயம்தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இருக்கிறதே தவிர, பழைய காலத்தில் இருக்கக்கூடிய இரண்டு கட்சிகளினுடைய, ஒரு புரிதலோடு இருந்த அதிகாரப் பகிர்வு இது கிடையாது. எந்தக் கட்சியும் இந்த அதிகாரப் பகிர்வை நோக்கி போனதில்லை. அதனால் ஒரு இயற்கையான ஒரு குடும்பமாக எல்லோரும் இன்றைக்கு இயற்கையாகவே சேர்ந்த மக்கள் விரும்பிய ஒரு சமூக நீதி நாளாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைய நாளை பார்க்கிறார். அனைத்துக் கட்சிகளும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் முதல்முறையாக அதிகாரத்திற்குள், அமைச்சரவைக்குள் வந்த செய்தியை எல்லோரும் தனது வீட்டில் ஒரு பெரிய பண்டிகை போன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நெகிழ்ச்சியான தருணத்தை நேற்று ஐ.யூ.எம்.எல் அலுவலகத்தில் திரு. ஷாஜகான் அவர்களை இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் கட்டிப்பிடித்து கண்ணீரோடு அந்தப் பொறுப்பை ஏற்றதை நாம் சோசியல் மீடியாவில் பார்த்திருப்போம். இதை ஒரு உண்மையான சமூக நீதி நாளாக நாங்கள் பார்க்கிறோம்

கண்டிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கிய இந்த அமைச்சரவை மக்களுக்கான, ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கான சிறந்த திட்டங்களை வழங்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். அதில் ஒரு வருத்தத்திற்குரிய பதிவு என்னவென்றால், 2021ல் திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டார்கள். பொதுவாக, தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி என்பது அந்தந்தத் தலைமையும் அந்தந்தக் கட்சியும் முடிவு செய்யக்கூடிய இடத்தில் அவர்களுக்கான ஜனநாயக கடமை இருக்கிறது. எந்தக் கட்சியும் திமுகவிற்கு அடிமை சாசனத்தை எழுதிய கட்சி கிடையாது. இத்தனை நாள் திமுக கட்சியில் ஒவ்வொரு கட்சியும் அடிமை சாசனத்தை எழுதிய ஒரு வரலாற்றைதான் பார்த்திருப்போம். அப்படி இருக்கும்பொழுது திரு. ராஜா அண்ணன் அவர்கள் முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்தவர், அவருடைய பதிவு அண்ணன் திருமாவளவன் அவர்களையும் விசிக தோழர்களையும் பார்த்து... திமுக தலைவரும் திரு. உதயநிதி அவர்களும் நாங்கள் ஏன் தோற்றோம் என்ற ஒரு ஆராய்ச்சி செய்வதற்கு 36 நபர்களை நியமித்திருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு ஏன் தோற்றோம் என்பது புரியவில்லை. அரசியலில் ஒரு கட்சியின் தலைவரை தாக்கும்போது ஒரு பெண்ணுடைய உறவை அடிப்படையாக வைத்து எப்போதும் ஒரு பெண்ணை நோக்கிய விமர்சனத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். அப்படி திரு. ராஜா அண்ணன் அவர்கள் வாயில் சொல்ல முடியாதளவிற்கு, தலித் சகோதரர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் மதிக்கக்கூடிய கொள்கைத் தலைவராக இருக்கக்கூடிய அண்ணன் திருமாவளவன் அவர்களைப் பார்த்து ஒரு பதிவை பதிவு செய்திருக்கிறார். அந்த வார்த்தையை சொல்வதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கிறது. அந்த வார்த்தைகளை விசிக தொண்டர்கள் மீதும், அண்ணன் திருமாவளவன் அவர்கள் மீதும் பதிவு செய்ய வேண்டிய அந்த நோக்கமே எங்களால் கண்டிக்கத்தக்கது.

எதிர்க்கட்சி அரசியலை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் செய்யக்கூடிய தவறுகளை சொல்லும்போது மக்களுக்காக திட்டங்களை மாற்ற முடியும். ஆனால், தனிநபர் விமர்சனத்தையோ ஒரு கட்சியின் தலைவரையோ அல்லது ஒரு கட்சியின் தொண்டர்களையோ பெண்ணுடைய உறவை மையப்படுத்தி பேசுவது - இது பெரியார் சொன்னதும் கிடையாது, அறிஞர் அண்ணாவும் சொன்னதும் கிடையாது, குறிப்பாக, திமுக எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பாடம் கிடையாது. இன்றைக்குத் திமுகவிற்கு கடமையும் இல்லை, கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. கலைஞர் அவர்களுடன் அந்த மூன்று கோட்பாடுகளையும் மறந்துவிட்டார்கள்.

ஒரு துணை பொதுச்செயலாளராக இருக்கக்கூடியவர்கள் இது போன்ற ஒரு பதிவை பதிவு செய்கிறார்கள். இதற்கு திமுக தலைவராக இருக்கக்கூடிய திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் விளக்கம் என்ன? ஒரு கூட்டணியில் இருக்கும்போது நட்பு என்பது.. இந்த கூட்டணி முடிவல்ல. இன்றைக்கு தமிழக மக்களின் 
people mandate, ஜனநாயக சக்திகள் அதை நிறைவேற்றியிருக்கிறார்கள், திமுக எதிர்க்கட்சியாக செயல்படும்போது நாங்கள் அரவணைக்கிறோம். தமிழ்நாட்டில் முதல்முறையாக எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் வெற்றி பெற்றவுடன் எதிரி அரசியல் செய்யாமல் திமுக தலைவர்கள் அவர்களின் வீட்டிற்கே சென்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இந்த ஜனநாயக பண்பு தமிழக வெற்றி கழகத்திற்கும் புதிதாகத் தோன்றிய எங்களுக்கும் இருக்கிறது. ஆனால், 75 வருட கட்சி என்று சொல்லும் திமுகவிற்கு அந்த ஜனநாயக பண்பு இல்லை. அண்ணன் திரு. ஆ.ராசா அவர்களின் சமூக வலைதள பதிவை நாங்கள் கண்டிக்கிறோம். அதற்கு பகிரங்கமான மன்னிப்பை தமிழக மக்களிடமும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

திருமதி கனிமொழி மேடம் அவர்கள் எப்போதும் குரல் கொடுப்பார்கள். ஆனால், திமுகவில் தன்னுடைய சக தோழர்களாக இருக்கக்கூடிய துணை பொதுச்செயலாளர்கள் பெண் உறவை வைத்துப் பேசக்கூடிய அந்த வார்த்தைகளுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது போன்ற சொற்களை, சமூக வலைத்தளங்களிலும் ஒரு பெண்ணை நோக்கி விமர்சனம் செய்யும்போது காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஏனென்றால், இந்த அரசை உருவாக்கியது பெண்கள். எந்தப் பெண்கள் மீதும் சமூக வலைத்தளங்களிலோ அல்லது அரசியல்ரீதியாகவோ ஒரு தாக்குதல் ஏற்பட்டால் கடுமையாக சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட, பெண்களுடைய பாதுகாப்பையும் மாண்பையும் உறுதி செய்ய நாங்கள் காவல்துறையை நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதற்கு பிறகு, திமுக துணை பொதுச் செயலாளர் திருமதி கனிமொழி அவர்கள் நேற்று சமூக வலைதளத்தில் ஒரு பதிவை போட்டார்கள். நாங்கள் அவர்கள் மீது எப்போதும் மரியாதை வைத்திருக்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை பற்றி சொல்லியிருந்தார்கள். இதை நாங்கள் ஏற்கனவே, இதற்கான விளக்கத்தை கொடுத்து இருந்தோம். திமுக தலைவராக இருக்கக்கூடிய இன்றைய திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் பதவியில் இருந்த போது இதே ஆளுநர் சமீபத்தில் உள்துறையிலிருந்து ஒரு சுற்றறிக்கை வந்திருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் இந்தியா முழுவதும் வந்தே மாதிரத்தை முதலில் பாட சொல்லி இருக்கிறார்கள். ஆளுநரிடம் அந்த சுற்றறிக்கை வந்திருக்கிறது. நம்முடைய நிலைப்பாடு இதுவரை அரசு நிகழ்ச்சிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. எல்லா துறை சார்ந்த செயலாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். இப்போது முதல் நிகழ்வு பதவியேற்பு விழா. முதல் நாளே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆளுநர் அவர்களிடம் இதைப் பற்றி ஐந்து நிமிடம் பேசினார். எங்களுடைய கட்சியின் பெயரே தமிழக வெற்றிக்கழகம். தமிழுக்குதான் எப்பொழுதும் முன்னுரிமை. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் நீங்கள் பாட வேண்டும் என்று கூறினார். அதற்கு பிறகு தனிப்பட்ட முறையில் நானும் ஆளுநரை சந்தித்தேன். ஆனால், அவர் சொன்னது உள்துறையில் என்ன சுற்றறிக்கை வந்திருக்கிறதோ அதன்படி தான் நாங்கள் நடத்த முடியும் என்று அவர் கூறினார். பதவி விழா முடிந்தது. இரண்டாவது அரசு நிகழ்ச்சியும் பதவி விழா தான். மூன்றாவது அரசு  நிகழ்ச்சியும் பதவி ஏற்பு விழா தான்.

இதற்கு முன்பே திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சர்  
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பில் இருக்கும் பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பதவி ஏற்கும் பொழுது இதே நடைமுறையை ஆளுநர் அவர்கள் கடைபிடித்தார். அப்போது திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் தாய் வாழ்த்து முக்கியம் என்று அந்த நிலைப்பாட்டை தான் பதிவில் தெரிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை, மாநில சுயாட்சி கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் என்ன கூறினாரோ, தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் இருப்பது மாநில சுயாட்சிக்கு எதிராக எழுப்பிய குரல் என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம்.
சட்ட வல்லுநர்களுடன் அதைப் பற்றிய ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது. இந்த சுற்றறிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்கு செல்ல முடியுமா என்பது பற்றி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆளுநரிடம் நாங்கள் இரண்டு, மூன்று முறை பேசி பார்த்தோம். அவரைப் பொறுத்தவரை, மக்கள் பவனில் ஆளுநர் அவர்கள் தலைமையில் நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் உள்துறையின் சுற்றறிக்கையைதான் நான் பின்பற்ற்  முடியும் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்துவிட்டார். தமிழக அரசினுடைய நிகழ்ச்சிகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் இடம்பெறும். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மாநில சுயாட்சிக் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இரு மொழிக் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கல்வித்துறையில் எந்த அழுத்தங்கள் வந்தாலும் மாநில சுயாட்சி கொள்கையை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருக்கிறோம். மதச்சார்பற்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களின் நிலைப்பாடுதான் எங்களுடைய நிலைப்பாடும். எந்த காலத்திலும் எப்பொழுதும் நாங்கள் தமிழையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அது எங்களுடைய உயிர் நாடி என்பதை பதிவு செய்கிறோம்.” என்று அமைச்சர் ஆதவ் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com