அமைச்சர் அன்பில் மகேஸ் உடல்நலம் பாதிப்பு- பெங்களூருவில் சிகிச்சை
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று காலை சேலத்திலிருந்து தருமபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரியில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டு இருந்தார். காரில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவரை காரிமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை சோதித்துப் பார்த்ததில், செரிமானச் சிக்கலும் வாயுத் தொல்லையும் இருப்பது தெரியவந்தது.
பின்னர், அங்கிருந்து அடுத்தகட்ட சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் சிகிச்சை பெற்றுவருகிறார்.