ஒரு பைசாகூட என் வீட்டிலிருந்து எடுக்கவில்லை- அமைச்சர் வேலு மறுப்பு!

ஒரு பைசாகூட என் வீட்டிலிருந்து எடுக்கவில்லை- அமைச்சர் வேலு மறுப்பு!

வருமான வரித் துறை சோதனையில் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தன் தரப்பிலிலிருந்து ஒரு பைசாகூட பறிமுதல் செய்யப்பட வில்லை என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

பொதுப்பணி- நெடுஞ்சாலைத் துறைகளின் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய சென்னை, திருவண்ணாமலை, வந்தவாசி, திருச்சி, கரூர், கோவை உள்பட பல ஊர்களில், 5 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரி சோதனை நேற்று முடிவடைந்தது.

நேற்று இரவு திருவண்ணாமலையில் ஊடகத்தினரைச் சந்தித்து வேலு விளக்கம் அளித்தார்.

”என் கோப்புகளைப் பார்க்கும் உதவியாளர் சுப்பிரமணி, ஓட்டுநடம் 5 நாள்களாக கேள்வி கேட்பதாகக் கூறி வருமானவரித் துறையினர் மன உளைச்சலை உருவாக்கி விட்டார்கள். கண்ணீர் வரவழைக்கும்படியாக கேள்விகளால் துளைத்தெடுத்து விட்டார்கள். நானும் என் மனைவியும் தனித்தனியே வசித்துவருகிறோம். எங்கள் மகன்கள் இருவரும் தனித்தனியே வசிக்கிறார்கள். நாங்கள் வருமான வரியைக் கட்டிவிடுகிறோம். ஆனால் வருமான வரித் துறையினர் கேள்விகளால் மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டனர்.

நான் வெளிநாட்டிலிருந்து ஒன்றும் வந்தவன் இல்லை, இந்த மண்ணுக்குச் சொந்தகாரன், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சென்னையில் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டேன். இப்படி ஈட்டிய பணத்தின் மூலம் என் தாயார் சரஸ்வதி அம்மாள் பெயரில் 1991இல் அறக்கட்டளையைத் தொடங்கினேன். இதன் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி ஏராளமான பொறியாளர்களை உருவாக்கியிருக்கிறோம்.

எனக்குள்ள சொத்து என்றால் 48 ஏக்கர் 33 செண்ட் நிலம் காந்தி நகரில் எனக்கு ஒதுக்கப்பட்டது. மருத்து வமனைக்காக 33 ஆண்டுகள் குத்தகை வாடகைக்கு கொடுத்துள்ளோம். சென்னையில் ஒரு வீடு உள்ளது. இவைதான் எனக்கான சொத்துகள். இதைத்தான் தேர்தல் பிரமாண பத்திரத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன். ஆண்டுதோறும் வரவு செலவுக் கணக்கை சரியாக தாக்கல்செய்து வருகிறேன். வருமானவரித் துறையை ஏமாற்றுபவன் நான் அல்ல.

என்னிடம் மக்கள் மனு அளிக்க வருபவர்களையும் தொடர்புபடுத்தி, விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது நியாயமா? பா.ஜ.க.வில் தொழிலதிபர்களே இல்லையா.. அவர்களின் இடங்களுக்கெல்லாம் வருமானவரித் துறை போகிறதா? தி.மு.க. மீது மட்டும் வருமானவரித் துறையினர் சோதனை செய்வது ஏன்? இந்த சோதனையால் எனது 5 நாள்கள் அரசுப்பணி முடங்கிவிட்டது.” என்று அமைச்சர் வேலு கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com