ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கும் அரசுக்குக் கண்டனம் எனும் தலைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதில், “தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1331 விடுதிகளில் 98,909 மாணாக்கர்கள் தங்கி கல்வி பயின்று வருகிறார்கள். விடுதிகளில் பழுது/பராமரிப்பு பணிகளுக்காக கடந்த காலங்களில் ஆண்டுதோறும் ரூபாய் 6 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில், இவ்வரசு பொறுப்பேற்றவுடன் 2021-2022 ஆம் ஆண்டு திருத்திய வரவு செலவு திட்டத்தில் சிறப்பு பராமரிப்பு பணிக்காக கூடுதல் நிதி ரூ25.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழக்கமான நிதி ரூ1.0 கோடியும் சேர்த்து ரூ.35 கோடி மதிப்பீட்டில் 366 விடுதிகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விடுதிகளுக்கு சென்று பார்த்தாலே கடந்த பத்து ஆண்டுகளில் முந்தைய ஆட்சியைப் போல் அல்லாமல் மிகச்சிறப்பாக பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வந்திருப்பதை கண்கூட அறிய முடியும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மயிலாப்பூர் மாணவர் விடுதிக்கு ரூ.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்
சென்னையில் உள்ள 19 விடுதிகளுக்கு இரண்டு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது; மயிலாப்பூர் கல்லூரி மாணவர் விடுதிக்கு தினந்தோறும் சைதாப்பேட்டை எம்.சி ராஜா மாணவர் விடுதியில் இருந்து மாணாக்கர் எண்ணிக்கைக்கேற்ப சரியான அளவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது; மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவானது சரியான அளவு, தரத்தில் உள்ளதா என்பதைக் கண்காணிக்க தனியாக ஒரு செயலி ஏற்படுத்தப்பட்டு தினமும் அச்செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது; இது சரிதானா என்பதை அவ்விடுதியில் தங்கியுள்ள மாணாக்கர்களே சரிபார்க்க முடியும் என்றும் அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார்.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியானது திருப்பி அனுப்பப்படுகிறது என்பது தவறு என்றும் 2023-2024 ஆம் நிதியாண்டில் இதுவரை 97.6% செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் கயல்விழி விளக்கம் அளித்துள்ளார்.