
பதினேழாவது சட்டப்பேரவையின் புதிய உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
காலையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர்கள், சட்டப்பேரவைக் கட்சிக் குழுக்களின் தலைவர்கள் உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
ஒவ்வொருவரும் பதவியேற்கும் முன்னர் அவர்கள் தேர்தலில் வென்றதற்கான வெற்றிச் சான்றிதழை சட்டப்பேரவைச் செயலாளரிடம் வழங்கவேண்டும். ஆனால் அமைச்சர் கீர்த்தனா தன்னுடைய சான்றிதழை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்ததால், அவர் பதவியேற்பு மேசை வரை சென்றும் திரும்பிச் செல்ல வேண்டியதாகிவிட்டது.
பின்னர் வீட்டிலிருந்து அதை எடுத்துவந்து அமைச்சர் கீர்த்தனா பதவியேற்றுக்கொண்டார்.
இதைப்போல, அ.தி.மு.க.வில் குழுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில் மும்முரம் காட்டிவரும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மற்றவர்களுடன் சேர்ந்து பதவியேற்றுக்கொள்ளவில்லை. அவைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் வெளியில் புறப்படுச் சென்றார்.
பின்னர், சட்டப்பேரவைச் செயலாளர் அலுவலகத்தில் வந்து அவர் பதவியேற்றுக்கொண்டார்.