சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி

சிறுவாணி நீரைக் குறைவாகத் தரும் கேரளா - வேலுமணி கேள்வி, நேரு பதில்!

கோவைக்கு சிறுவாணி அணை நீரானது 25 நாள்களுக்கு ஒரு முறைதான் கிடைத்துவருகிறது என்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் இன்று பிரச்னையை எழுப்பினார்.

அவையில் இன்று காலையில் கேள்வி நேரத்தின்போது, “ கோவை மாநகர மக்களுக்கு குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் சிறுவாணி அணையிலிருந்து நாளுக்கு 73 மில்லியன் லிட்டர் தண்ணீருக்குப் பதிலாக, 38 மில்லியன் லிட்டர்தான் வழங்கப்படுகிறது. இதனால் 25 நாள்களுக்கு ஒரு முறைதான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கிறது. இது குறித்து விசாரித்ததில் கேரள அரசு 35 மில்லியன் லிட்டர் தண்ணீர் குறைவாகத் தருவதாகத் தெரியவந்தது. இதில் கேரள அரசுடன் பேசி நமக்கு உரிய நீரைப் பெற அரசு முன்வரவேண்டும்.” என்று வேலுமணி பேசினார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு பதில்
சட்டப்பேரவையில் அமைச்சர் நேரு பதில்

அவருக்குப் பதில் அளித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, ” சிறுவாணி தண்ணீரை கேரள அரசு 38 மில்லியன் லிட்டர்தான் தருகிறார்கள். நேற்றுகூட நான் சொல்லியிருக்கிறேன். 83 மில்லியன் லிட்டர் அவர்கள் தரவேண்டும். மழை இல்லாத காரணத்தால் ஆழியாறிலிருந்து தமிழகம் குறைவாகத் தண்ணீர் தருவதால், தாங்கள் சிறுவாணியிலிருந்து குறைவாகத் தருவதாக அவர்கள் சொன்னார்கள். கடந்த முறைகூட, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரிடம் சொல்லி, (கேரள) முதலமைச்சரிடம் பேசி, உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று (கோவை எம்.பி. மார்க்சிஸ்ட் கட்சியின்) நடராஜனிடம் பேசி, இதுபோல இருக்கிறதே என்று சொல்லி, அவரும் பேசுவதாகச் சொன்னார். எனவே, சிறுவாணி தண்ணீரைப் பெற அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.

மேலும், “ தினமும் 168 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கும் பில்லூர் மூன்றாவது திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மின்சாரம் குறைவாக இருப்பதால் இரண்டு மோட்டார்கள் மட்டும் ஓடப்பட்டு, இப்போது ஆறு மோட்டார்கள் போடப்பட்டு மின்சாரமும் சரிசெய்யப்பட்டு, ஒரு நாளுக்கு கோவைக்கு 300 மில்லியன் லிட்டர் தண்ணீர் கோவை நகருக்கு வரும் திட்டம் தொடங்கப்பட்டு விட்டது. எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் கோவை நகருக்கு குடிநீர் கொடுக்கப்படும்.” என்றும் அமைச்சர் நேரு கூறினார்.

இத்துடன், கோவை வெள்ளலூர் பேருந்துநிலையத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதைப் பற்றியும் வேலுமணி கேட்டதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நேரு கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com