
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதற்கு பா.ஜ.க. தரப்பில் மாநில அரசின் மீது பதில் புகார் கூறினார்கள்.
இந்த நிலையில், இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறிய பதில்:
“ மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முடியும் தருவாயில் இருப்பதாக சொல்ல முடியாது. ஒரு பிளாக் மட்டுமே கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதுவும்கூட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியினை விரைப்படுத்திட வேண்டும் என்று சொல்லி என்னையும், இத்துறையின் செயலாளர் அவர்களையும் ஜப்பானுக்கு அனுப்பி JICA நிறுவனத்தின் துணைத் தலைவர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் போனது மட்டுமல்ல டெல்லியில் இருக்கின்ற எய்ம்ஸ் அதிகாரி அவர்களையும் அழைத்து சென்றோம். ஜப்பான் பன்னோட்டு கூட்டுறவு முகமை (JICA) நிறுவனம் தான் ஒன்றிய அரசு இதற்கான கடனை கேட்டு இருந்தது. அதற்கான நிதி நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருந்த நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரிடையாக ஜப்பானுக்கு சென்று அந்த கடனை விடுவிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்த சொன்னார்கள். அந்தவகையில் நானும் இத்துறையின் செயலாளர் அவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை ஒருங்கிணைப்பு அலுவலர் அவர்களும் சென்று JICA துணைத் தலைவர் அவர்களிடம் கேட்டோம். கேட்டதற்கு பிறகுதான் அந்த தொகை விடுவிக்கப்பட்டது கட்டிடப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழுமையாக பணிகள் முடிவடைவதற்கு 2028 இறுதி ஆகும் என்று அன்றே ஜப்பான் JICA நிறுவனம் சொன்னது. இருப்பினும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்க்கைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒத்துழைப்பு தந்து இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்களை சேர்க்க வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்கள் என்கின்ற வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அம்மாணவர்கள் நமது மாநில அரசு மருத்துவக்கல்லூரியில்தான் பயின்று வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி பார்க்காமலேயே மருத்துவக்கல்லூரி படிப்பை முடித்து வெளியில் செல்பவர்களாக ஒரு Batch வர இருக்கிறது. இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனையின் இன்றைய நிலை.” என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.