மாணவிகளைத் தொட்ட விவகாரம்- அன்பில் மகேசுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம்

உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்
உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன்
Published on

பள்ளி மாணவிகளின் காலை உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தொட்டு விரலைச் சொடுக்கிவிட்ட காட்சி சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதற்கு விளக்கம் அளிக்கும்வகையிலும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசுக்குப் பதில் அளிக்கும்வகையிலும் விஸ்வநாதன் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கை :  

” மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் 56-வது பிறந்தநாள் விழா, முதலமைச்சர் விஜய்யின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘விரா” (விஜய் - ராகுல் ViRa) விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 4 கி.மீ. தூரம் பங்கேற்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி மயக்கத்தை போக்குகின்ற வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன். இதற்கு பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்நோக்கம் கற்ப்பிக்கின்ற வகையில் இழிவுபடுத்தி, தி.மு.க. ஐ.டி. விங்கில் பதிவு செய்திருப்பது மிகவும் அநாகரீகமான செயலாகும்.

தமிழகத்தில் 60 ஆண்டு கால திராவிட அரசியலுக்கு முடிவுகட்டி, தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு இனி எதிர்காலத்தில் மீண்டும் ஆட்சிக்கே வர முடியாத அளவில் மிகச் சிறப்பான மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை முதலமைச்சர் விஜய் நடத்திக் கொண்டிருப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத வகையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிவு அமைந்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

கடந்த காலத்தில் அவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ஊழலின் ஊற்றுக் கண்ணாக அந்தத் துறையை மாற்றி எத்தகைய லஞ்ச லாவண்யம் நடைபெற்றது என்பதை சமீபத்தில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவர் விலாவாரியாக ஊடகத்தின் மூலம் அம்பலப்படுத்தியதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாத அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குறிப்பாக, தலித் சமுதாயத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கிற என்னைக் குறிவைத்து, இழிவுபடுத்திப் பேசுவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மேலும், தங்களது ஐ.டி. விங் மூலம் இழிவான பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தங்களது தரத்தைத்தான் அவர்கள் தாழ்த்திக் கொள்கிறார்களே தவிர, எக்காலத்திலும் எங்களை விமர்சனத்தின் மூலம் வெல்ல முடியாது என்பதை உறுதியாகக் கூற விரும்புகிறேன். இனியும் இத்தகைய கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்வார்களேயானால், அதற்குரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.” என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com