ஆவின் பால் மாற்றம் - அமைச்சரின் விளக்கம்!

Minister Rajakannappan
அமைச்சர் ராஜகண்ணப்பன்
Published on

ஆவின் பாலின் விலை தொடர்பாக பால் வளத் துறை அமைச்சர் இராஜ.கண்ணப்பன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ஆவின் பால் நிறுவனம் மூலம் புதிதாக கிரீன் மேஜிக் பிளஸ் எனும் பாலை 50 மிலி குறைவாகவும் 3 ரூபாய் அதிகமாகவும் விற்பனை செய்யவுள்ளதாகவும் அதை நிறுத்தவேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியிருந்தார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும்படியாக அமைச்சர் கண்ணப்பன் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கை விவரம்:

“ தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. 

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020ஆம் ஆண்டில் சுமார் 23 இலட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனை தற்போது 2024-2025இல் சுமார் 7 இலட்சம் லிட்டர் அதிகரித்து 30 இலட்சம் லிட்டர் அளவில் விற்பனையை அதிகரித்துள்ளது.

மேலும் அனைத்து மாவட்டங்களின் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் உடல் நலத்திற்கு ஏற்றவாறு வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு அனைவரும் விரும்பும் வகையில், புதிய வகையான கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் சோதனை அடிப்படையில் சில ஒன்றியங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க அனைத்து தனியார் நிறுவனத்தின் விற்பனை விலையைக்காட்டிலும் குறைவான விலையில் ஆவின் நிறுவனம் பால் விற்பனை செய்து வருகிறது.

புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட பால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும்.  மேலும்,  தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவை குறைக்கவில்லை.” என்று அமைச்சர் கண்ணப்பன் கூறியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com