ஆளுநர் ரவி - மா. சுப்பிரமணியன்
ஆளுநர் ரவி - மா. சுப்பிரமணியன்

ஆளுநரின் பேச்சு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்றது! – மா. சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடமாட்டேன் என ஆளுநர் ரவி பேசியிருப்பது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போன்றது என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை அம்மாசியப்பன் என்பவர் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் நீட் தேர்வில் இருந்து எப்போது விலக்கு கொடுப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு இருந்த ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அவரை உட்காருங்கள் என அதட்டி அவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்டது.

பெற்றோரின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதிலளிக்கையில் “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசியமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன்”எனத் தெரிவித்தார். ஆளுநரின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆளுநரை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை கையெழுத்து இட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் அரசியல் சட்ட அமைப்பின் படி ஆளுநருக்கு உள்ள அதிகாரம். அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி, ஆளுநர் ஆர். என். ரவி பேசிவருவது கண்டனத்துக்குரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.

ஏற்கனவே ஆளுநரை நீக்கக் கோரி தமிழ்நாட்டு மக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தி வருகின்றது. ஆளுநரின் இந்த ஆணவப்பேச்சு அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆளுநரின் பேச்சு குறித்து, “நீட் தேர்வு விலக்கு மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்த மசோதாவுக்கும் ஆளுநருக்கும் இனிமேல் எந்தத் தொடர்பும் இல்லை. நீட் விவகாரத்தில் ஆளுநரின் இந்தப் பேச்சு குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதைப் போன்றது. மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டுமே தவிர மக்கள் கொள்கைக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி பேசக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com