பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு
பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

ஒகேனக்கல் நீர்மின் திட்டம்- ஒப்புதல்தராத கர்நாடக அரசு: தங்கம் தென்னரசு தகவல்

ஒகேனக்கலில் வரும் காவிரி வெள்ள நீரைப் பயன்படுத்தி நீர்மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த, கர்நாடக அரசு ஒப்புதல் அளிக்காமல், தானே அப்படியான திட்டத்தில் இறங்கியது என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் இதுகுறித்து கோரிக்கை வைத்துப் பேசிய பா.ம.க. குழுத் தலைவர் ஜி.கே.மணி, ”தமிழ்நாட்டின் மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட். ஆனால் மின் உற்பத்தி 16, 915 மெகாவாட். மீதியிருப்பதை வெளியில் வாங்கிக்கொள்கிறோம். ஆனால் குந்தா, காடம்பாறை, மேட்டூர் உட்பட்ட பெரிய அணைகள், சிற்றணைகள், கதவணைகள் மூலம் 2,320 மெகாவாட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அனல் மின் நிலையங்கள், மற்ற மின்நிலையங்கள் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேடு மாசுபடுதலும் அதிக உற்பத்திச் செலவும் ஆகிறது. நீர் மின்நிலையம் மூலம் செலவு குறைவாகவும் மாசில்லாமலும் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும் என்பதால், பென்னாகரம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒகேனக்கலில் கன மழை பெய்கிறபோது வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 250 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலுக்குச் செல்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் நீர்மின் நிலையம் அமைக்க வேண்டும்.”என்று வலியுறுத்தினார்.

அவருக்குப் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,“புனல் மின் திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் தருகிறது. குந்தா நீரேற்று, கொல்லிமலை புனல் மின் திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. கொஞ்ச காலத்துக்கு முன்னர் ஒரு கொள்கை முடிவு எடுத்து, மேல்பவானி நீலகிரி, சாண்டிநல்லா நீலகிரி, சீகூர் நீலகிரி புனல் மின் திட்டங்களை என்டிபிசி மூலம் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், மேல்பவானி, சாண்டிநல்லா, கோதையாறு, மணலாறு, ஆழியாறு, வெள்ளிமலை, பாலாறு, பொருந்தலாறு, மஞ்சளாறு, சிலகல்லா, சாத்தாறு ஆகிய இடங்களில் பொது- தனியார் கூட்டில் இந்தத் திட்டங்களைச் செய்ய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.“ என்று தெரிவித்தார்.

மீண்டும் பேசிய மணி, ”ஒகேனக்கலில் 1,150 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யக்கூடிய அளவுக்கு இருக்கும்நிலையில், மாநிலப் பிரச்னையால் தேசிய மின் கழகத்தின் மூலம் நீர் மின்நிலையம் அமைப்பது பொருத்தமாக இருக்கும். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே இதைப் பற்றி எடுத்துக்கூறி, திட்டம் நிலுவையில் இருக்கிறது.” என்று சுட்டிக்காட்டினார்.

அதை ஏற்றுக்கொண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

“தேசிய நீர் மின் கழகம் மூலம் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் 2008இல் அப்போதைய மைய அரசின் மூலம் இதுதொடர்பான முத்தரப்பு வரைவு ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, தமிழகம் தன் இசைவைத் தெரிவித்துவிட்டது. ஆனால், கர்நாடக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இத்திட்டம் நிலுவையில் இருக்கும்போதே கர்நாடக அரசு தங்களின் மின்சாரக் கழகத்தின் மூலம், சிவசமுத்திரம், ராசிமணல், ஒகேனக்கல் உட்பட்ட நான்கு இடங்களில் செய்யப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், காவிரிப் பிரச்னை உள்ளதால், நம்முடைய இசைவு இல்லாமல் அப்படியான திட்டத்தைத் தொடங்கக்கூடாது என ஒன்றிய அரசின் மின்சாரத் துறைக்கும் வனத்துறைக்கும் வலியுறுத்தியிருக்கிறோம். நீரில் மூழ்கக்கூடிய பகுதி இரண்டு மாநிலங்களிலும் வருவதால், இதில் ஒத்திசைவு வரும்போது இத்திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம்.”என்று அமைச்சர் தென்னரசு பதில்கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com