முதலமைச்சரே பல்கலைக்கழகத்தின் வேந்தர் என கடந்த தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சராக காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதன் பதவியேற்றுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், இந்த மசோதாவைப் பற்றிக் கேட்டதற்கு, கடந்த ஆட்சியில் எடுத்த முடிவை இந்த அரசாங்கமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில்லை; இதில் முதலமைச்சர் விஜய் முடிவெடுப்பார் என்று கூறினார்.
அரசியல் அரங்கில் அவரின் இந்த பதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வி.சி.க.வின் பொதுச்செயலாளர் இரவிக்குமார், “ உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் இதை முதலமைச்சரின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.