ஜூனியர் விகடன் மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்!

 மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சித் தொண்டர்களுக்கான மடல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். 

அதில், அண்மையில் அவர் கலந்துகொண்ட வேலூர், திருப்பத்தூர் நிகழ்ச்சிகள் குறித்து விவரித்து கட்சி நிர்வாகிகளைப் பாராட்டி விவரித்திருந்தார்.

அத்துடன், விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் ஜூனியர் விகடன் இதழைப் பற்றி பெயர் குறிப்பிடாமல் குறைகூறியுள்ளார். 

அந்த இதழில் அட்டைப்படக் கட்டுரையாக, ஸ்டாலின் நடத்தும் நிர்வாகிகளுடனான நேர்காணல்களைப் பற்றி விமர்சித்து செய்தி வெளியாகியிருந்தது. 

அதையொட்டியே ஸ்டாலின் இன்று தன் கருத்தைக் கூறியுள்ளார். 

“பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் ஒன்று தன்னுடைய இதழில், ‘உடன்பிறப்பே வா‘ சந்திப்பு குறித்து, தன் பேனாவில் மைக்குப் பதிலாகப் பொய்யை ஊற்றி எழுதியிருப்பதைப் படித்தபோது, தன் இதழியல் அறத்தைத் தொலைத்து அந்த நிறுவனம் ஏன் இந்தளவு காழ்ப்புணர்வு காட்டுகிறது என்றுதான் தோன்றியது. அறிவாலயத்தில் நடக்கும் சந்திப்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்பதைக்கூட பெருங்குற்றம் போல அந்த ஏடு சித்தரித்திருந்தது. கழகத்தின் கட்டமைப்பைக்கூட பாரம்பரியப் பத்திரிகை அறியவில்லையே என்று நகைத்தபடி பக்கத்தைப் புரட்டினேன்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் காலத்தில் கழகம் எப்படியெல்லாம் சிறப்பாக இருந்தது என்று இப்போது எழுதும் இத்தகைய ஏடுகள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரது பேராற்றலைப் பாராட்டி எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கின்றன? தலைவர் கலைஞர் காலத்திலும் கழகத்தின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசியதை அவற்றின் பழைய ஏடுகளின் பக்கங்களைப் புரட்டினால் புரிந்துகொள்ளலாம். பேரறிஞர் அண்ணா காலத்துக் கழகம் போல, கலைஞர் காலத்தில் இல்லை என்றார்கள்.  கலைஞர் காலத்துக் கழகம் போல இப்போது இல்லை என்கிறார்கள். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா காலம் தொடங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும், தற்போது உங்களில் ஒருவனான என் தலைமையிலும் வலிமை குறையாமல் இருப்பதால்தான் 75 காலமாக உயிர்ப்புடன் வாழ்கிறது. ஆறாவது முறையாகத் தமிழ்நாட்டை ஆள்கிறது. ஏழாவது முறையும் ஆட்சி அமையும்.

‘உடன்பிறப்பே வா’ எனும் கழக நிர்வாகிகளின் மனம் திறந்த சந்திப்பின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அதில் பங்கேற்ற ஒவ்வொரு தொகுதியின் நகர - ஒன்றிய - பகுதி - பேரூர் நிர்வாகிகள் அறிவார்கள். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியைச் சேர்ந்த உடன்பிறப்பு கிள்ளை ரவீந்திரன் அந்த அனுபவத்தை உணர்வுப்பூர்வமாகச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்ததைப் படித்தேன்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com