குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்காமல், தீபாவளி பரிசுக் கொடுத்து அனுப்பியுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். மேலும், த.வெ.க.வைச் சேர்ந்த துணை சபாநாயகர் ரவி சங்கர், அடிப்படை வசதிகள் குறித்து புகாரளிக்க வந்தவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"'தவறு செய்தால் விடமாட்டேன்' என முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என சேதத்தை கட்டுப்படுத்துவதற்காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை பரப்பி இருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'கண்டிப்பான அதிகாரி' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா?
பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! ரியல் ஆக்சன் எடுத்து, தான் எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும்." என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.