ஆளுநரைக் கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆளுநரைக் கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சர்ச்சை, போராட்டம்... ஆளுநர் உரை இல்லாமல் முடிந்த மதுரை பட்டமளிப்பு விழா!

மதுரையில் நடைபெற்ற காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா, பல சர்ச்சைகளுடன் சிறப்பு உரை இல்லாமலேயே முடிவடைந்தது.

முன்னதாக, பல்கலைக்கழகத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது என சிண்டிகேட், செனட் குழுக்கள் தீர்மானித்தன. அதன்படி பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அவர் அந்தக் கோப்பில் கையெழுத்திட மறுத்துவந்தார்.

பட்டமளிப்பு விழாவுக்கு முந்தைய நாளன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தான் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி நேற்று அவர் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

ஆளுநரைக் கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆளுநரைக் கண்டித்து மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திட்டமிட்டபடி பட்டமளிப்பு நிகழ்வுக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு எதிராக, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர் செல்லும் வழியில் மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் இளைஞர்களும் கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டனர். அப்போது, காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களில் 184 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

அந்த இடத்தைக் கடந்துசென்ற ஆளுநர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் 15 பேர் நேற்று நிகழ்வைப் புறக்கணித்தனர். மேலும் இரண்டு பேராசிரியர்களும் இரவியின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரிடமிருந்து பட்டம் பெற முடியாது எனப் புறக்கணித்தனர். அவர்கள் இருவருக்கும் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பட்டமளிப்பு விழாவில் உரை எதுவும் நிகழ்த்தாமலேயே ஆளுநர் திரும்பினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com