மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தி.மு.க.வினர் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற ஸ்டாலின் கடிதம்!

வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வினர் ஒற்றுமையுடன் உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் பதவியில் அவர் வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த நான்கு நாட்களாக காவிரிப் பாசனப் பகுதியில் அரசு நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த விவரங்களையெல்லாம் குறிப்பிட்டும் வரும் மக்களவைத் தேர்தல் பற்றியும் அறிவுறுத்தியுள்ளார்.

“2019 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையான கூட்டணியை உருவாக்கினோம். ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் பன்முகத்தன்மை மீதும், மதச்சார்பின்மை கொள்கை மீதும் நம்பிக்கையும் உறுதியும் கொண்ட கூட்டணி. தமிழ்நாட்டில் பெற்ற மகத்தான வெற்றி என்பது இந்திய அளவிலான அரசியல் இயக்கங்களுக்கு ஒரு ஃபார்முலாவாக ஆனது.” எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,

”ஒன்றிய ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டால்தான், நமது மாநிலத்திற்குரிய நிதி ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கும். முழுமையான வெளிச்சம் பரவும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மதவாத இருட்டை விரட்டும் விடியல் தேவைப்படுகின்ற காலம் இது.” என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி கடந்த பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சியில், எந்த அளவு பாழ்பட்டது என்பதை மக்கள் பார்த்தார்கள்; அனுபவித்தார்கள்; அந்த நிலையை கடந்த இரண்டாண்டுகளில் பெருமளவு மாற்றி இருக்கிறோம்; வளர்ச்சிப் படிக்கட்டுகளில் தமிழ்நாடு முன்னேறிக் கொண்டிருகிறது; இந்த வளர்ச்சி நீடிக்க வேண்டும் என்றால் தி.மு.க. தொடர்ந்து ஆட்சி செய்கின்ற வாய்ப்பு அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர்,

”இந்தியாவின் வெற்றி முழுமையடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும். உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும். ஒற்றுமையுடன் கூடிய உழைப்பு எப்போதுமே வெற்றியாக விளையும். உடன்பிறப்புகள் அந்த ஒற்றுமையைக் கட்டிக்காத்து உழைத்திட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற மாவட்டச்செயலாளர் ஆலோசனக் கூட்டத்திலும், கட்சி நிர்வாகிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டி, கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். அதையொட்டி சில நிர்வாகிகளும் மாற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com