போதை வழக்கைத் திசைதிருப்பவே நா.த.க. கார்த்திகா கைது - மு.க.ஸ்டாலின்

M.K.Stalin
மு.க.ஸ்டாலின்
Published on: 

நடந்துமுடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை த.வெ.க. அரசு கைதுசெய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக ஊடகப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:

"ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைதுசெய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப்போகிறது?

கடந்த காலங்களில் கார்த்திகா தி.மு.க.வையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கைவழி நின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை.

ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக்கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைதுசெய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல் துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள்.

த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு காவல் துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்துக் கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது.

மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.

குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக்கொண்டே வருகிறது. கார்த்திகாவையும் அவரின் கட்சியினரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்." என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com