தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணியளவில் சென்னைக்குத் திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் பயண விவரங்களை எடுத்துரைத்தார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியதையும் அவர் தெரிவித்த பல்வேறு கருத்துகளையும் பார்த்தீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு, “ பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். ஏனென்றால் பா.ஜ.க.தான் எதிர்க்கட்சி மாதிரியும் காங்கிரஸ் கட்சி ஆளும் கட்சி மாதிரியும் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ந்து அவர் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டு ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருப்பதைப்போல அதைத் தாக்கி பேசிக்கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது.” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
மக்களவைத் தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்றுவதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “ மொத்தம் நானூறுதானா... 543 இடங்கள் இருக்கின்றன. அவற்றையும் கைப்பற்றுவதாகச் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.” என்றார் ஸ்டாலின்.
நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியிருக்கிறார்...அரசியலுக்கு வந்திருக்கிறாரே... அதைப் பற்றி என ஒருவர் கேட்க, “ மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.” என்று கூறிவிட்டு, செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார் மு.க.ஸ்டாலின்.