நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் மு.க.ஸ்டாலின் ஒப்பம்
நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் மு.க.ஸ்டாலின் ஒப்பம்

போர்வாள், ஃபயர்வால்... ஐ.டி. அணி இளைஞர்களிடம் ஸ்டாலின் புல்ஃபார்மில் பேச்சு!

தி.மு.க.வை ஆதரித்து சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்படுவோரிடையே அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று உரையாற்றினார்.

பூந்தமல்லி சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு, ”விங்2பாயிண்ட்சீரோ (Wing2Point0) சமூக வலைத்தளத் தன்னார்வலர்கள் சந்திப்பு” எனப் பெயரிடப்பட்டிருந்தது.

முன்னதாக, பதவிமாற்றம் செய்யப்பட்ட அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தலைமையிலிருந்து, டி.ஆர். பாலுவின் மகன் தற்போதைய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வசம் சமூக ஊடக அணி மாறியபிறகு, அதில் புதுப்புது மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன். அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

நிகழ்வின் தொடக்கமாக, கட்சியின் மாணவரணி, மருத்துவரணி ஆகியவை இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஸ்டாலின் தன் கையெழுத்தை இட்டார்.

பின்னர் அவர் பேசுகையில், தன்னுடைய தி.மு.க. அமைப்புப் பணிகளைப் பற்றி பல முறை விவரித்ததுடன், சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்படுபவர்களைத் தான் நேரடியாகவும் மற்றவர்கள் மூலமாகவும் உளவுத் துறை மூலமாகவும் கவனிப்பதாகக் குறிப்பிட்டார்.

தற்போதைய சமூக ஊடகப் புழக்கத்தில் ஆங்கிலம் கலந்துபேசும் இளைஞர்களை ஈர்க்கும்வகையில், போர்வாள், ஃபயர்வால் என்றெல்லாம் அடுக்குமொழியிலும் பேசி ஸ்டாலின் அசத்தினார்.

மு.க.ஸ்டாலினின் முழு உரை:

” அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் என்னிடம் வந்து, “சோஷியல் மீடியாவில் தீவிரமாக செயல்படும் தன்னார்வலர்கள் உங்களைச் சந்திக்க வேண்டும்” என்று சொன்னார். அவர் சொன்ன உடன், ”அவர்களைச் சந்திக்க நான்தான் மிகவும் ஆசையாக இருக்கிறேன்” என்று சொல்லி, உங்களைச் சந்திக்க இன்றைக்கு வந்திருக்கிறேன். என்னுடைய பெயர் – நான் யார், என்னுடைய பயோ-டேட்டா என்ன எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், உங்களில் பலரின் பெயர் கூட எனக்குத் தெரியாது.

சிலரின் ஃபேஸ்புக் – ட்விட்டர் ஐடி தெரியும். ஆனால், அது இவர்கள்தான் என்று தெரியாது. பெரும்பாலும், உங்கள் அனைவரின் பதிவுகளையும் என்னுடைய டைம்லைனில் படித்திருப்பேன்; ரசித்திருப்பேன்; சில நேரம், “அடடா! எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறார்கள்” என்று வியந்திருக்கிறேன், சிரித்திருக்கிறேன்;

சிலர் நீண்ட பதிவுகள் எழுதுவீர்கள். சிலர் இரத்தினச் சுருக்கமாக, க்ரிஸ்ப்பாக எழுதுவீர்கள். சிலர் மீம்ஸ் போடுவீர்கள். சிலர் பழைய வரலாற்றையெல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்துவீர்கள். இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல்!

ஆனால், அது எல்லாமே தி.மு.க. ஸ்டைல்! அதனால், உங்கள் ஊர் - பெயர் தெரியவில்லை என்றால் என்ன? நாம் எல்லோரும் தி.மு.க.காரர்கள்தானே! தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள்தானே! உங்களில் ஒருவன்தான் நானும்!

இந்த பந்தமும் – பாசமும் மட்டும் என்றைக்கும் மாறவே மாறாது! என் டைம்லைனில் சிலரின் பதிவுகள் மிஸ் ஆனாலும், ஐ.டி.விங், செய்தித் துறை, உளவுத்துறை, என்னுடைய நண்பர்கள் என்று பலரும் உங்களின் பதிவுகளை எனக்கு அனுப்பி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில், நான் உங்களின் ஃபாலோயர்! பார்க்காமலேயே நண்பர்களாக இருந்த கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் போலதான் நம்முடைய நட்பும் உறவும்! அந்த நட்புணர்வோடுதான் உங்களை நான் இன்றைக்கு பார்க்க வந்திருக்கிறேன்.

இந்தச் சந்திப்பில் நான் ஷேர் செய்யும் செய்திகளை நீங்கள் லைக் செய்வீர்கள் என்று நம்புகிறேன். லைக் செய்தால் மட்டும் போதாது, அதை நீங்கள் ரீ-ஷேர் செய்ய வேண்டும்! செய்வீர்கள்தானே?

கரை வேட்டி கட்டியவர்கள் – கட்டாதவர்கள் என்று தி.மு.க.காரர்களைத் தலைவர் கலைஞர் அவர்கள் இரண்டு வகைப்படுத்துவார். சிலர் நேரடி அரசியலில் ஈடுபட மாட்டார்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், ”தமிழினத்தின் மீட்சிக்காக உருவான இயக்கம் தி.மு.க.தான்!” என்று உரக்கச் சொல்லுவார்கள்!

கரை வேட்டி கட்டியவர்கள், சிங்கிள் டீ குடித்துவிட்டு வேலை பார்ப்பார்கள் என்றால், கரை வேட்டி கட்டாதவர்கள், எலக்‌ஷன் நேரத்தில், வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு செல்வார்கள். இந்த பாரம்பரியத்தின் அப்டேட்டட் வெர்ஷன்தான் நீங்கள்!

கட்சிக்கு அரணாக இருக்கும் கரை வேட்டி கட்டியவர்கள், போர்வாள்! இணையத்தில் இயக்கத்துக்காக உணர்வுப்பூர்வமாக போராடுகிற நீங்கள், ஃபயர்வால்! சிலசமயம் கழகத்தின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சனம் செய்து எழுதுகிறீர்கள். உங்களின் விமர்சனத்தை ANTI-வைரஸ் அலர்ட்டாகத்தான் நான் பார்க்கிறேன். கழகத்தை விமர்சிக்க மற்ற எல்லாரையும் விட, கழகத்தில் இருப்பவர்களுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. இந்த உரிமை நம்மால் - நம்முடைய உறவால் வந்தது! அந்த உறவுக்கு என்றைக்கும் குந்தகம் வந்துவிடக் கூடாது என்று கடமையுணர்வோடு எச்சரிக்கையாக செயலாற்றுவதுதான் என்னுடைய நன்றியின் வெளிப்பாடாக இருக்கும்!

தலைவர் கலைஞர் ஒருமுறை சொன்னார், “நான் பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின்' என்று சொன்னார். தலைவர் கலைஞர் நிறைந்துவிட்ட பிறகு, கழகத்தின் தலைவராகவும் - தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இன்னும் பொறுமையாக நடந்துக் கொள்ள என்னை நானே பக்குவப்படுத்திக் கொண்டேன்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தமிழினத் தலைவர் கலைஞர் – வகுத்துத் தந்த பாதையில் கழகத்தையும் கழக அரசையும் நடத்துவதுதான் என்னுடைய முழுமுதல் இலக்கு! அதனால் பாராட்டுகளைப் போலவே, விமர்சனங்களையும் நான் வரவேற்கிறேன்.

அது இன்னும் என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள உதவுகிறது. உங்களின் விமர்சனத்தில் தனிப்பட்ட நலனைவிட, பொதுநலன்தான் அதிகமாக இருக்கும். நல்ல நோக்கத்தோடு – பொது நம்பிக்கைக்காக நீங்கள் வைக்கும் ஆலோசனைகளை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். அந்த எண்ணத்தோடுதான் உங்களோடு உரையாட விரும்புகிறேன்.

நம்முடைய இயக்கம் பேசிப் பேசி – எழுதி எழுதி – வளர்ந்த இயக்கம். சமுதாயத்தை உயர்த்தக் கூடிய - இனமான எழுச்சியைத் தட்டியெழுப்பக் கூடிய – மொழி உணர்வை ஊட்டக் கூடிய வகையில் நம்டைய பேச்சுகளும் எழுத்துகளும் இருந்தன; இப்போதும் இருக்கிறது; அவ்வாறுதான் எப்போதும் இருக்கும்!

200-க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள், ஏராளமான நாடகக் குழுக்கள், இசைக்குழுக்கள் – பாடகர்கள் என்று சாமானியர்களின் மிகப்பெரிய பட்டாளமே இந்த இயக்கத்துக்காக உழைத்தது. அவ்வாறு, நானும் இயக்கத்தில் வந்து சேர்ந்து, நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். நாடகம் மட்டுமா, ஸ்கூல் பையனாக இருக்கும்போதே முரசொலிக்காக வேலை பார்த்தேன். கழகச் செய்திகளைத் தொகுத்து எழுதிக் கொடுப்பேன்.

நாளிதழ்களை ரயில் நிலையங்களுக்கு கொண்டு சென்று அனுப்பி வைப்பேன். ’இளைய சூரியன்’ என்ற பத்திரிகையை சொர்ணம் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு அதைத் தொடர்ந்து நடத்தினேன். ’முரசே முழங்கு’, ‘திண்டுக்கல் தீர்ப்பு’ போன்ற நாடகங்களில் ஊர் ஊராகச் சென்று நடித்திருக்கிறேன். ’ஒரே ரத்தம்’ திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ’நந்தக்குமார்’ கேரக்டரில் நடித்தேன். மக்கள் ஆணையிட்டால் திரைப்படத்தில் ஒரு சிறப்பு ரோல். ‘ஆற அமர கொஞ்சம் யோசித்துப் பாரு, நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்தித்துப் பாரு‘ என்று கலைஞர் எழுதிய பாடலை பாடி அதில் நடித்தேன். குறிஞ்சி மலர், சூர்யா போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறேன். இவ்வாறு, எல்லா விதமான ஊடகங்களிலும் வேலை பார்த்தவன் நான்.

இப்போது, ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக ஊடகங்களிலும் கழகக் கொள்கைகளை எதிரொலித்துக் கொண்டு இருக்கிறேன்.

சமூக ஊடகங்களில் இருக்கும் அட்வாண்டேஜ் என்ன என்றால், இதில், மக்களின் ரியாக்‌ஷனை உடனே தெரிந்து கொள்ளலாம். ஒரு கருத்தைச் சொன்னால் - உடனே ஆதரித்தும், எதிர்த்தும், வாழ்த்தியும், திட்டியும். அவதூறு பரப்பியும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் வந்துவிடுகிறது. நம்முடைய கருத்துகள் நொடியில் கோடிக்கணக்கானவர்களுக்குச் சென்று சேர்ந்துவிடுகிறது.

’முரசே முழங்கு’ நாடகத்தின் வெற்றி விழா நிகழ்ச்சிக்கு ரோடு ரோடாக ரிக்‌ஷாவில் சென்று போஸ்டர் ஒட்டியவன் நான். ஒருமுறை போஸ்டர் ஒட்டிவிட்டு, அதிகாலையில் நான்கு மணிக்குத்தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அப்போது ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில், “ஸ்டிக் நோ பில்ஸ் என்று போடப்பட்டிருந்த சுவரில் எதற்கு போஸ்டர் ஒட்டினீர்கள்?” என்று என் மேல் கேஸ் போட்டுவிட்டார்கள். அப்போது நான் முதலமைச்சரின் மகன். எதற்குச் சொல்கிறேன் என்றால், அப்போதே அப்படி இருந்தது நம்முடைய ஆட்சி. அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்பத்தான் இப்போதும் நடக்கும். வேறு வழியில்லை.

ஆனால், இன்றைக்கு அந்த நிலையெல்லாம் மாறிவிட்டது. வாட்ஸ்அப்-இல் ஒரு Card போட்டால் போதும்! எவ்வளவோ பெரிய வளர்ச்சி இது. இந்த வசதியையும் வாய்ப்பையும் முறையாக – சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திராவிட இயக்கம் என்பது தமிழினத்தைத் தலைநிமிர வைக்க - பிறந்த இயக்கம்! யார் தலையையும் எடுக்கப் பிறந்த இயக்கமல்ல! சீவுவேன்… சீவுவேன் என்று சொல்கிறார்களே இப்போது…

சமூக வலைத்தளங்களில் நம் நோக்கத்தை நாம் முறையாகப் பயன்படுத்துவோம்! அந்த வாய்ப்பை நேரான வழியில் பயன்படுத்துவோம்! சமூக வலைத்தளங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லும். ஒருவர் பல காலம் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்துவிடும். என்னைப் பொறுத்தவரை நெகட்டிவ் பிரச்சாரத்தின் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட, பாசிட்டிவ் பிரச்சாரத்தின் மூலம் நம்மை வளர்த்துக்கொள்வதுதான் சரியானது!

தன்னை யாரெல்லாம் எதிர்த்தார்கள் என்று தந்தை பெரியாரே பட்டியல் போட்டு சொல்லி இருக்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த தலைவர்கள் - இயக்கங்கள் – பத்திரிக்கைகள் என்று எல்லோராலும் எதிர்க்கப்பட்டவர் தந்தை பெரியார். அவர்களின் பெயரெல்லாம் பட்டியல் போட்டால் அதில் பலரை உங்களுக்கு யாரென்றே தெரியாது. ஆனால், பெரியார் இன்றைக்கும் வாழ்கிறார்.

“வாழ்க வசவாளர்கள்!” என்று சொல்லி தன்னுடைய எதிரிகளை அன்பால் வீழ்த்தியவவர் நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்.

”கூட்டில் இருக்கும் புழுக்களைப் போல் கொட்டப்பட்டு கொட்டப்பட்டு வளர்ந்தவன் நான்” – “நான் எனது எதிரிகளுக்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நான் வளர்ந்திருக்கவே முடியாது”- ”யாருக்கெல்லாம் நன்மை செய்தேனோ, அவர்களால் அதிகமாக தாக்கப்பட்டவன் நான்” என்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார். இதெல்லாம்தான் நமக்கான பாடங்கள்!

அதற்காக யாருக்கும் பதில் சொல்லக் கூடாது; எல்லா விமர்சனங்களையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை! குறை சொல்கிறவர்கள் - அவதூறு பரப்புகிறவர்கள் - பழி சுமத்துகிறவர்கள் - எல்லாக் காலத்திலும்தான் இருந்தார்கள். மருந்து கண்டுபிடித்துவிட்டால் நோய்க் கிருமிகள் ஒழிந்துவிடுமா என்ன? அதுமாதிரிதான். சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டு இருந்த நோய்க் கிருமிகளை ஒழிக்க உருவான மருந்துதான் திராவிட இயக்கம்! அதனால், அந்த நோய்க் கிருமிகளை எதிர்த்து நாம்தான் போராடியாக வேண்டும். இன்றைக்கு சோஷியல் மீடியாவும் சில மீடியாக்களும் அவர்கள் கண்ட்ரோலில் இருக்கிறது. அதனால், பொய் சொல்லவும் அவதூறு செய்யவும் அவர்கள் தயங்குவதில்லை. இதற்குச் சரியான பதிலை நாம சொல்ல வேண்டும். ராணுவத்தின் முன்கள வீரர்கள் மாதிரி, கழகத்தின் முன்தள வீரர்கள் நீங்கள்!

களமும் தளமும் கைகோத்தால்தான் வெற்றி! களத்தில் நிற்கும் வேட்பாளருக்கு தளத்தில் களமாடி வெற்றிக்கு காரணமாக இருக்கிறவர்கள் நீங்கள்! இங்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 99 இலட்சத்து 62 ஆயிரத்து 618. ஏறத்தாழ ஒரு கோடி ஃபாலோயர்ஸ் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களின் தன்னார்வத்தால், தன்னலமற்ற செயல்பாட்டால் கழகத்துக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

’தொண்டர்களின் உழைப்பு கழகத்திற்கு ரத்தநாளம்’ என்று தலைவர் கலைஞர் சொல்வார். அதனால்தான், தலைமைக் கழகத்தின் சார்பிலோ – நிர்வாகிகளின் அறிக்கையோ வருவதற்கு முன்பே, உங்களிடம் இருந்து ரியாக்‌ஷன் வந்துவிடுகிறது. நாங்கள் சொல்ல முடியாததை - சொல்லத் தயங்குவதைக் கூட உங்களால் சொல்ல முடியும்! அந்த வகையில் நீங்கள் தி.மு.க.விற்கு மிகப்பெரிய பலம்! ஏராளமான அரசியல் எதிரிகளை வெற்றிகண்ட வரலாறு நம்முடையது. ’கொம்பாதி கொம்பர்கள்’ என்று சொல்லப்பட்டவர்களை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறோம்.

இந்த இயக்கத்தை அழிச்சிடலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம்தான் அழிந்து போயிருக்கிறதே தவிர, தி.மு.க.வை அவர்களால் கற்பனையில் கூட அழிக்க முடியாது. ”திராவிட இயக்கத்தைக் குழி தோண்டிப் புதைப்பேன் – வேரோடும் வேரடி மண்ணோடும் புதைப்பேன்” என்று சொன்னது யார் என்று கேட்டால், யாருக்கும் தெரியாது. ”திராவிட இயக்கத்தை ஒழிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை” என்று சொன்ன பல பேர், கடைசியில் இங்குதான் அடைக்கலமானார்கள். இதுதான் வரலாறு!

மூதறிஞர் இராஜாஜியும், சிலம்புச்செல்வர் ம.பொ.சி.-யும் இந்த இயக்கத்தைத் தொடக்க காலத்தில் எதிர்த்தார்கள். ஆனால், 1967 தேர்தலில் தி.மு.க.-வை ஆதரித்தார் இராஜாஜி. உதயசூரியனிலேயே போட்டியிட்டார் ம.பொ.சி. அந்தத் தலைவர்களுக்கு எல்லாம் மாற்றுக் கொள்கை இருந்தது.

ஆனால் இன்றைக்கு, பா.ஜ.க – அ.தி.மு.க போன்ற வெகுஜன விரோதிகளின் நாம் மோதிக்கொண்டு இருக்கிறோம். பாசிசத்துக்கு எதிராக நேரடியாக மோதிக்கொண்டு இருக்கிறோம். எப்படியாவது மக்களைச் சாதியின் பெயரால் மதங்களின் பெயரால் பிளவுபடுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்கும் ஒரு கூட்டத்துக்கு எதிராக நாம் மோதிக்கொண்டு இருக்கிறோம். பா.ஜ.க.வின் பாசிசத்தன்மை ஏதோ நமக்கோ - நம் இயக்கத்துக்கோ – நம்மோட கொள்கைகளுக்கோ – நம்முடைய தமிழ்நாட்டுக்கோ மட்டும் எதிரானது அல்ல! இந்தியாவுக்கே எதிரானது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரானது.

இப்படிப்பட்ட பாசிசவாதிகள் ஒருபக்கம் - இவர்களுடைய பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அடிமை அ.தி.மு.க மறுபக்கம். கொள்கை என்றால், “கிலோ என்ன விலை?” என்று கேட்கும் கொள்கையற்ற கூட்டம்தான் அ.தி.முக! இனிமேலும், பா.ஜ.க.வுடன் இருந்தால் தமிழ்நாட்டு மக்களால் மொத்தமாகப் புறக்கணிக்கப்படுவோம் என்று பயந்து, “உள்ளே வெளியே” ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வும் அண்ணா பெயரில் கட்சி நடத்தி அதை பா.ஜ.க.விடம் அடகு வைத்த அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல! நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்தான் இருவரும்!

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, அரசியல் எதிரிகள் மேல் மட்டுமல்ல, ஊடகவியலாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடப் பற்றுமிக்கவர்கள் என்று எல்லோர் மீதும், அதிகார அத்துமீறல்கள், மிரட்டல்கள், அடக்குமுறை ஏவல்கள் செய்பவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சோஷியல் வைரஸைத்தான் நாம் துணிவோடு எதிர்த்து நிற்கிறோம். மிசா… தடா… பொடா… எல்லாம் பார்த்தாயிற்று. மிரட்டல்… உருட்டல்… இதெல்லாம் நம்மை ஒன்றும் செய்யாதென்பதால்தான், பொய் மூட்டைகளையும் அவதூறுகளையும் கட்டவிழ்க்கிறார்கள்! ஹிட்லருக்காவது ஒரே ஒரு கோயபல்ஸ்தான் இருந்தார். ஆனால், கோயபல்ஸ் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் எவ்வாறு இருக்குமோ அப்படித்தான் அந்தக் கூட்டம் இருக்கிறது! போகிறபோக்கில் யார் மீது வேண்டுமானாலும் அவதூறு பரப்பலாம்... என்ன பொய் வேண்டுமானாலும் சொல்லலாம்… எதற்கும் ஆதாரம் வேண்டாம்! பொய் பேசுகிறோமே என்கிற கூச்சம் வேண்டாம்! அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிதான்.

அதில் என்ன வதந்திகளை வேண்டுமானாலும் பரப்பலாம். அதை நம்புவதற்கு ஆட்டுமந்தைக் கூட்டம் தயாராக இருக்கிறதென அடித்து விடுகிறார்கள்… தம் பிடித்து அவர்கள் ஊதுகிற பொய் பலூனை, உண்மை என்கிற ஊசியை வைத்து எளிதாக நாம உடைத்து விடுகிறோமே என்ற எரிச்சல் அவர்களுக்கு… பொய்களுக்குப் பொய்கள் என்றைக்குமே பதிலாகாது! போலியான பெருமைகள் நமக்குத் தேவையில்லை! உண்மையான உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்தால் போதும்! நமது செய்திகள் உண்மையானவையாக இருக்க வேண்டுமே தவிர, பா.ஜ.க.வினரைப் போல போலியாக இருக்கக் கூடாது.

அவர்களுக்கு இப்போது ஒரே வேலைதான்! துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, ”பாத்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார்”- எனப் பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோயிலுக்கும்தான் துர்கா செல்கிறார். அது அவரது விருப்பம். அதை நான் தடுக்கவில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர - ஆன்மீகத்துக்கு எதிரிகள் அல்ல. கோயிலும் – பக்தியும் அவரவர் உரிமை – விருப்பம்! ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெகு மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான். தலைவர் கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில்: ”கோயில் கூடாது என்றல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது!”

கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மீகத்தையும் – அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். ”இந்த கோயில இடிச்சிட்டாங்க அந்தக் கோயில இடிச்சிட்டாங்க”- என வாட்ஸ்அப்பில் பூகம்பப் படங்களைப் போட்டு வதந்தி பரப்புகிறார்கள். ஆனால், உண்மை என்ன? 1000 கோயில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்திய ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்ட ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. யார் யாரிடம் இருந்து, எங்கே எங்கே இருந்து இந்தச் சொத்தெல்லாம் மீட்கப்பட்டது என அறநிலையத்துறை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைச் சொல்வதெல்லாம்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

லைட் எரிந்தால் திருடனுக்குத்தான் பிடிக்காது! கோயிலை முறையாகப் பராமரித்தால் மதவெறியைத் தூண்டிக் குளிர்காய நினைக்கும் கும்பலுக்குப் பிடிக்காது. அதனால் உண்மைகளைத் தொடர்ந்து மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்! நம்முடைய கருத்துகளைத் தமிழைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள மற்ற மொழி பேசும் சகோதர – சகோதரிகளிடம் எடுத்துச் செல்வோம். அப்படி நம்முடைய கருத்துகளை மற்ற மொழிகளில் கொண்டுபோகத்தான் Speaking for India பாட்காஸ்ட் தொடரைத் தொடங்கியிருக்கிறேன். இதுவரைக்கும், 2 எபிசோட் வந்திருக்கிறது - இதை மொத்தம் 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். இது எத்தனை மாநாடுகளுக்கு சமம் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்!

இப்படி, நம் கருத்துகள் எல்லாத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும். இன்ஸ்டாகிராம், யூடியூப் என இளைய தலைமுறையினரை ஈர்க்கக்கூடிய சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டிருக்கும் ‘கலைஞர் 100’ புத்தகத்தைப் படித்து, எதிரிகளின் அவதூறுகளுக்கு உங்கள் பாணியில் பதிலடி கொடுங்கள்.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com