
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போதுதி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதையடுத்து, இரு தரப்பினரும் அரசியல்தளத்தில் கடுமையாக மோதிக்கொண்டுவரும் சூழலில், கடந்ததிங்களன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் செய்த செய்கை மிக மோசமானது என பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியது.
கூட்டணியில் உள்ள திருமாவளவனும் மிசா காலத்தில் தாடை உடைக்கப்பட்ட ஸ்டாலினைக் குறிப்பிடும்படியாக விஜய் செய்துகாட்டிய உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என்று கடுமையாகச் சாடினார்.
இந்த நிலையில், இன்று காலையில் காணொலி ஒன்றை வெளியிட்ட மு.க.ஸ்டாலின், “தேர்தலில் வெற்றிபெற்றதும் என்னை வந்து சந்தித்தபோது, பிரச்சாரத்தில் உங்களைப் பற்றி கடுமையாகப் பேசிவிட்டேன். சாரி சார் என்று சொன்னீர்களே தம்பி விஜய்... அதையெல்லாம் விடுங்க பிரதர், நீங்கள் இப்போது நாட்டின் முதலமைச்சர். இனி இப்படி பேசுவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனச் சொன்னேன். அதை மறந்துவிட்டீர்களா?” என்று குறிப்பிட்டு, தன்னுடைய மிசா காலத்துக் கொடுமைகளையெல்லாம் நினைவுகூர்ந்துள்ளார்.