டைம்ஸ் ஆப் இண்டியா அருண்ராம் படம் நீக்கம்- பாசிசமா, பாயாசமா?- மு.க.ஸ்டாலின்

M.K.Stalin
மு.க.ஸ்டாலின்
Published on: 

”டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். இது பாசிசமா பாயாசமா?” என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விஜய்க்குக் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க.வின் பாசிச எதிர்ப்பு என்ற பிரச்சாரத்தை பாயாசமா எனக் கிண்டலுடன் விஜய் கேட்டிருந்தார். அதைப் பூடகமாகச் சுட்டிக்காட்டுவதைப் போல ஸ்டாலின் இப்போது கேட்டுள்ளார்.  

”கட்டுரை வெளியான உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?

கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?

விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?” என்றும் ஸ்டாலினின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.