ஏதோ கடைசி விவசாயியைப் போலப் பேசுகிறார் எடப்பாடி - சிதம்பரம் பிரச்சாரத்தில் எகிறிய மு.க.ஸ்டாலின்!

சிதம்பரத்தில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம்
சிதம்பரத்தில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டம்
Published on

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிதம்பரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அக்கூட்டணியின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் வி.சி.க. தலைவர் திருமாவளவன், மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சுதா ஆகியோருக்கு வாக்குகேட்டு பேசினார்.

அந்த உரை:

”தமிழ்க் கலைகள் அனைத்திற்கும் தலைசிறந்த சிதம்பரம் நகருக்கு வந்திருக்கிறேன்! திராவிட இயக்கத்திற்கு ஆற்றல்மிக்க தீரர்களை உருவாக்கிய அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ள தில்லை நகருக்கு வந்திருக்கிறேன். காவிரியும் - கடலும் முத்தமிடும் முத்தமிழறிஞர் கலைஞர் கண்ட புகழ்மிக்க பூம்புகார் உள்ள மயிலாடுதுறைக்கு வந்திருக்கிறேன். சிதம்பரம் - மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கும் இந்த மாபெரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் என் மாலை வணக்கம்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கினிய நண்பர் – என் பாசமிகு சகோதரர் – வெற்றி வேட்பாளர் - எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் தி.மு.க.வில் பயின்று, வி.சி.க. என்ற இயக்கமாக இன்று வளர்ந்திருக்கிறார். அவர் மட்டும் வளரவில்லை, இயக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு சகோதர – சகோதரிகளையும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்கிறார். அதனால்தான், தலைவர் கலைஞர் அவர்கள், சகோதரர் திருமா அவர்களை ‘மேஜர் ஜெனரல்’ என்று பாராட்டினார். நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அவரின் குரல்; தமிழ்நாட்டின் உரிமைக்குரல்! மொழிக்கும் – இனத்துக்கும் – நாட்டுக்கும் - மக்களுக்கும் – ஆபத்து என்றால், களத்திற்கு முதலில் வரும் சகோதரர் திருமா அவர்களுக்குப் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருமாவை வெற்றி பெற வைக்க, வேங்கையின் மைந்தன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும், அரியலூர் அரிமா எஸ்.எஸ்.சிவசங்கரையும் இறக்கிவிட்டுள்ளேன். ஒரு சிறுத்தைக்காக இரண்டு சிங்கங்கள் களத்தில் இருக்கின்றன.

அதேபோல், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் - வெற்றி வேட்பாளர் – வழக்கறிஞர் சுதா அவர்களுக்குக் கை சின்னத்தில் உங்களின் வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கறிஞர் சுதா அவர்கள், தொலைக்காட்சி விவாதங்களில் வாதாடுவதைப் பார்த்திருப்பீர்கள்! மக்களுக்காகவும் - இந்திய ஒற்றுமைக்காகவும் ஆணித்தரமான கருத்துகளால் எதிரிகளை நிலைகுலையச் செய்யும் ஆற்றல் பெற்றவர்! அவரின் வாதத்திறமை, நாடாளுமன்றத்திலும் ஒலிக்க, வழக்கறிஞர் சுதா அவர்களுக்கு, மயிலாடுதுறை தொகுதி மக்கள் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தயாராகிவிட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல, இந்த ஸ்டாலினின் தூதுவர்களாக, உங்கள் பகுதியில் இருக்கும் மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு மாபெரும் ஆதரவைத் திரட்ட வேண்டும்! அதன்மூலம், சகோதரர் திருமா அவர்களையும், சகோதரி சுதா அவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்! வெற்றி பெற வைப்பீர்களா? அதற்குப் பிறகு என்ன? வேட்பாளர்கள் எம்.பி. ஆகிவிடுவீர்கள், இப்போது உட்காருங்கள்!

இந்தத் தேர்தலில், நீங்கள் போடும் வாக்கு, திருமா அவர்கள் குறிப்பிட்டதைப் போல, எம்.பி.களுக்கு மட்டுமல்ல – நாட்டு மக்கள் மேல் அன்பும் - தமிழ்நாட்டு மேல் உண்மையான அக்கறையும் கொண்ட ஒருவர் பிரதமராக வர நீங்கள் வாக்களிக்க வேண்டும்! சமூகநீதியைக் காக்கும் ஒரு பிரதமர் தில்லியில் அமர வாக்களிக்க வேண்டும்! சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஏன்? அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கும் ஒரு பிரதமர் நாட்டை ஆள வாக்களிக்க வேண்டும்!

ஏன் என்றால், இப்போது இருக்கும் பிரதமர் மோடிக்கு, சமூகநீதிமேல் அக்கறை இல்லை! மதச்சார்பின்மையை மருந்துக்குக் கூட நினைப்பது இல்லை! சமத்துவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை! வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவை அவருக்குப் பிடிக்கவில்லை! மொத்தத்தில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை, ’பகையாளி இந்தியாவாக’ மாற்ற நினைக்கும் ஒரு பிரதமர் நமக்குத் தேவையில்லை!

இந்தத் தேர்தல் மூலமாக, இரண்டாம் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுத நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புதான் இந்தியா கூட்டணி! தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சமூகநீதி இந்தியா முழுவதும் பரவ உருவாகியுள்ள வாய்ப்புதான் இந்தியா கூட்டணி!

சமூகநீதி நமக்கு சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை! ஏராளமான தியாகங்களால் விளைந்ததுதான் சமூகநீதி! மாபெரும் தலைவர்களெல்லாம் உழைத்து, நமக்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர், டாக்டர்.நடேசனார், தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா, புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், வி.பி.சிங் போன்ற தலைவர்களால் போற்றி வளர்க்கப்பட்டதுதான் சமூகநீதிக் கருத்தியல்! இந்தச் சமூகநீதிதான் ஒடுக்கப்பட்ட மக்களை இன்றைக்கும் உயர்த்திக் கொண்டு இருக்கிறது!

1921-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சிதான், நம்முடைய மக்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியது. இந்த இடஒதுக்கீட்டிற்கு 1950-ஆம் ஆண்டு பேராபத்து வந்தது! தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார்! தமிழ்நாடே கொந்தளித்தது! பெருந்தலைவர் காமராசர் பிரதமர் நேருவிடம் வலியுறுத்தினார். புரட்சியாளர் அம்பேத்கர் அதற்கான சட்டத்திருத்தத்தை உருவாக்கிக் கொடுத்தார். இந்தத் தலைவர்களின் முயற்சியால்தான், “சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பிற்காக மாநிலங்கள் செய்யும் எந்தச் சிறப்பு ஏற்பாடும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதுதான்” என்ற அரசியல்சட்ட அங்கீகாரம் கிடைத்தது.

இப்போது தமிழ்நாட்டில் நாட்டிற்கே வழிகாட்டும் வகையில், 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், திராவிட இயக்கம்! தலைவர் கலைஞர்!

இப்போது இரண்டு - மூன்று தலைமுறையாகத்தான், நம்முடைய வீட்டில் இருந்து, இன்ஜினியர்கள் – டாக்டர்கள் – வருகிறார்கள். அத்தி பூத்தது போன்று சில ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் வர முடிகிறது! இதெல்லாம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது! இந்த வேலைக்கு இவர்கள் எல்லாம், இடஒதுக்கீட்டினால் வந்துவிடுகிறார்களே என்று நினைக்கிறார்கள்! ”எரியுதுடி மாலா… ஃபேன போடு” என்று கதறுகிறார்கள்! இடஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து, நம்முடைய குழந்தைகள் படித்து வேலைக்குச் செல்வதை கெடுக்க… என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்கிறார்கள்! இப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன்தான் - பா.ம.க. கூட்டணி அமைத்திருக்கிறது!

சில நாட்களுக்கு முன்பு வரை, விமர்சித்து பேசியவர்கள் இப்போது சேர்ந்திருக்கிறார்கள்! மனசாட்சி உள்ள பா.ம.க.வின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையுடன் தலைகுனிந்து நிற்கிறார்கள்! பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி! ஆனால், நாங்கள் உருவாக்கி இருக்கும், இந்தியா கூட்டணி கொள்கைக் கூட்டணி!

தி.மு.க.வும் - சகோதரர் திருமாவும் பேசும் சமூகநீதிக் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது! சகோதரர் ராகுல் காந்தி என்ன அறிவித்திருக்கிறார்?

”இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்.

ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்தச் சட்டத்திருத்தம் செய்யப்படும்.

SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.

SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு ஆக்கப்படும்.

முக்கியமாக, இதே அரியலூரைச் சேர்ந்த அனிதாவை “நீட்”-டுக்குப் பறிகொடுத்தோமே, பல தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரை பலி வாங்கிக்கொண்டு இருந்த நீட் தேர்வு ‘கட்டாயமல்ல’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்!

இதுமட்டுமல்ல, காங்கிரஸ் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளில் இன்னும் முக்கியமானவற்றைச் சொல்ல வேண்டும் என்றால், பா.ஜ.க.வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.

பொதுப்பட்டியலில் இருக்கும் அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஆய்வு செய்யப்படும்.

விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது.

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது.

விவசாயத்திற்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் தரப்படும்.

ஒன்றிய அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம் வழங்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை, மாநில அரசுகளின் ஆலோசனைப்படி திருத்தி அமைக்கப்படும்.

இப்படி, ஜூன்-4 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா கூட்டணி ஆட்சியில் இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறப் இருக்கிறது!

இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் தி.மு.க. சொல்வதை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறது! இதுதான் சமூகநீதிக் கூட்டணி! ஏன் என்றால், சமூகநீதி இந்தியாதான் இன்றைய உடனடித் தேவை! அதை அடைய, அமைதியான இந்தியா - வளர்ச்சியை நோக்கிய இந்தியா உருவாக - தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்! தனிநபர்களாக நீங்கள் வாக்களித்தால் மட்டும் போதாது! மக்களிடம் நீங்கள் சென்று பா.ஜ.க. ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டும்!

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமரானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது! நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது! அரசியலமைப்புச் சட்டம் அடியோடு மாற்றப்படும்! தேர்தல் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும்! மாநில அரசுகள் முனிசிபாலிட்டிகளாக மாற்றப்படும்! ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தப்படும்! நாடெங்கும் மதவெறி தலைவிரித்தாடும்! மதக்கலவரத்தில் ஈடுபடுகிறவர்களைத் தேசத்தியாகிகளாகப் போற்றுவார்கள்! அனைத்து மக்களும் சகோதர – சகோதரிகளாக வாழ்கிறோமே - அப்படிப்பட்ட நம்மைப் பிளவுப்படுத்துவார்கள்! வேற்றுமைகளும் - அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்குவார்கள்! நம்முடைய குழந்தைகளின் படிப்பைப் பறிப்பார்கள்! மக்களைச் சிந்திக்க விடமாட்டார்கள்! பொய்களையே வரலாறாக எழுதுவார்கள்! இஸ்லாமிய – கிறிஸ்துவ மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றி – அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள்.

ஒரே நாடு – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே தேர்தல் – ஒரே ரேஷன் கார்டு – ஒரே உணவு – ஒரே அரசு – ஒரே கட்சி – ஒரே தலைவர் என்று ஒரே ஒரே என்று ஒரேடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்! பா.ஜ.க.வின் திட்டங்கள் மிக மிக மோசமானது! அதைவிட ஆபத்தானது… மறுபடியும் நம்முடைய தமிழ்நாட்டின் மீது மாபெரும் பண்பாட்டுத் தாக்குதல் நடத்துவார்கள்... ஆட்சி நடத்துவது தில்லியா? இல்லை, நாக்பூரா? என்று சந்தேகம் வந்துவிடும்! பதவியில் இருக்கிறவர் பிரதமரா? இல்லை, ஆர்.எஸ்.எஸ். தலைவரா? என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்! இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திடக் கூடாது என்றுதான் ஊழல் – குடும்ப அரசியல் - இப்போது கச்சத்தீவு என்று திசைதிருப்புகிறார்.

ஊழல் பற்றிப் பேசும் பிரதமர் மோடியைப் பற்றி, இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை சொல்லியதே! ஊழல் வழக்குகளில் சிக்கி, பா.ஜ.க.வில் சேர்ந்தவர்களை எப்படி மோடி காப்பாற்றினார் என்று பட்டியல் போட்டு மாநிலம் வாரியாக தெளிவாக - விரிவாக வெளியிட்டு இருந்தார்களே!

பிரதமர் மோடி இப்போது அடிக்கடி சொல்கிறாரே, கேரண்டி… கேரண்டி என்று, அது எதற்குத் தெரியுமா? அவர் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறார்! ”Made by BJP” அந்த வாஷிங் மிஷின் மூலமாக, ஊழல் செய்த அரசியல்வாதிகள் பா.ஜ.கவுக்குள் சென்றால், மீண்டும் வரும்போது, ஊழல் கறை எல்லாம் சென்று, வழக்கு எல்லாம் வாபஸ் ஆகி, Clean ஆகிவிடுவார்கள்! அதற்குதான் மோடி கேரண்டி கேரண்டி என்று கத்துகிறார்?

பத்தாண்டு ஆட்சியில், பா.ஜ.க. ஊழல்கள் ஒன்றா - இரண்டா! அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான். உலக நாடுகள் மத்தியில், இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல்! கடந்த 5 ஆண்டுகளில் E.D. – I.T. – C.B.I. இவர்கள் கூட்டணி அமைப்புகள் மூலமாக ரெய்டுக்கு அனுப்புவது, அதற்குப் பிறகு பா.ஜ.க.வுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களாக வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு மெகா வசூல் நடந்ததில்லை!

அதுமட்டுமா, சி.ஏ.ஜி அறிக்கை வந்ததே! 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. ஆதாரத்தோடு அறிக்கை வெளியிட்டது! அந்த அறிக்கை பற்றி, ஒன்றிய அரசு, வாயையே திறக்கவில்லை!

தேர்தல் பத்திரம் போன்று மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார்! அதுவும் ‘பி.எம். கேர்ஸ் ஃபண்ட்’ என்று பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார்! இப்படி எல்லா ரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும்! அதேபோன்று, ரஃபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும்!

அதனால், பிரதமர் மோடியின் திசைதிருப்பும் நாடகத்தை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை! மக்களின் நம்பிக்கை இந்தியா கூட்டணி மீதுதான் இருக்கிறது! இந்தியா கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் அமைந்ததும் சாதனைகளாக மாறப்போகும் தி.மு.க. வெளியிட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்…

அரியலூர் முதல் சிதம்பரம் வரை ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்குடி வழியாக புதிய இரயில் பாதை!

அரியலூர் இரயில் நிலையத்தில் விரைவு மற்றும் சிறப்பு இரயில்கள் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்!

ஆத்தூர் இரயில் நிலையம் முதல் பெரம்பலூர் – அரியலூர் இரயில் நிலையம் வரை அகல இரயில் பாதைத் திட்டம்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் மூடப்பட்ட மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி இரயில் தடத்தைச் சீரமைத்து, காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு பயணிகள் பயணம் செய்ய ஏதுவாக அமைத்துத் தரப்படும்!

அதுமட்டுமல்ல, பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோத சட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்!

விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!

உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவுடன் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாகவும் ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாணவர்களுக்கு இரயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்!

இதெல்லாம், நேற்று வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது. அனைத்தையும் செய்யும் காலம் கனிந்து வருகிறது!

இதையெல்லாம் பார்த்து, பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒருவர் வலம் வருகிறார்! மக்கள் எல்லாத்தையும் மறந்துவிட்டு இருப்பார்கள் என்ற நினைத்து வகைதொகை இல்லாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பொய் பேசுகிறார் பழனிசாமி! பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவர்கள்கூட சொல்வதற்குக் கூசும் பொய்யை சர்வ சாதாரணமாகச் சொல்கிறார்…

என்ன பொய் தெரியுமா? பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவராம்! இதையெல்லாம் யாராவது, புயல் காற்றில் உட்கார்ந்து பொரிகடலை சாப்பிடுவார்கள், அவர்களிடம் சொல்லட்டும்… கைக்குழந்தைகள்கூட நம்பாத வடிகட்டின பொய்களை அடித்து விடுகிறார்… பழனிசாமி அவர்களே... நீங்கள் உழைத்து முன்னேறினீர்களா! இல்லை, ஊர்ந்து வந்தீர்களா! என்று ஊருக்கே தெரியும்… இந்த லட்சணத்தில் வாய்ச்சவடால் அவசியம்தானா… உங்கள் வாய்ச்சவடால் எல்லாம் உங்கள் அடிமைக் கூட்டத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்… அ.தி.மு.க.வில் கடைசித் தொண்டன்கூட தலைவராக முடியும் என்று பழனிசாமி சொல்கிறார்… உண்மை என்ன? அதிகமாகக் கப்பம் கட்ட கூடியவர்தான் தலைவராக முடியும் என்று கூவத்தூரில் ஏலம் எடுத்த பழனிசாமி மறக்கலாம்… மக்கள் மறக்கவில்லை!

முதலில் சசிகலா, பின்னர் தினகரன், அடுத்து பன்னீர்செல்வம் என்று இவர்கள் முதுகுமேல் எல்லாம் சவாரி செய்து, பதவி வாங்கிட்டு அவர்கள் முதுகிலேயே குத்திய நீங்கள் பேசலாமா? அதே அம்மையார் சசிகலாவைப் பார்த்து “நீ எனக்கு பதவி வாங்கி கொடுத்தியா” என்று ஒருமையில் பேசிய துரோகிதான் பழனிசாமி! தி.மு.க. குடும்பக்கட்சி என்ற பழைய டேப் ரெக்கார்டர் போன்று பாடிக் கொண்டு இருக்கிறார். ஒரு குடும்பத்திற்கே கொத்தடிமையாக இருந்து, அடிமை சேவகம் செய்த வரலாறுதான் அ.தி.மு.க.வுடையது! நாகரிகம் கருதி, ஓரளவுக்குதான் சொல்கிறேன்… நீதியரசர் குன்ஹா அவர்களின் தீர்ப்பைப் படியுங்கள்… உங்கள் கட்சி வரலாறு என்ன என்று தெரிந்துக் கொள்வீர்கள்.

தி.மு.க. ஆட்சி ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது என்று அடுத்த உருட்டு உருட்டியிருக்கார் பழனிசாமி… வரலாறு தெரியாத ஞானசூன்யங்களும், தற்குறிகளும்தான் இப்படி பேசுவார்கள்… 1976-இல் எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் போட்டதற்காகவும் - 1991-இல் இலங்கைத் தமிழர் உரிமைக்காக குரல் கொடுத்தது என்று சொல்லியும் தி.மு.க. ஆட்சியைக் கலைத்தார்கள்! இந்த வரலாறு எல்லாம் தெரியாமல், எதையாவது உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி! கொஞ்சம் நாவடக்கத்தோடு பேசுங்கள்.

அம்மையார் ஜெயலலிதா இரண்டு முறை ஊழலுக்காகச் சிறைக்குப்போனதால் - பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். முதலமைச்சராகலாம் என்று நினைத்த அம்மையார் சசிகலா ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றதால் பழனிசாமி முதலமைச்சரானார். காலில் ஊர்ந்து, கப்பம் கட்டுகிறேன் என்று கட்சியை ஏலத்தில் எடுத்துவிட்டு, இப்போது அந்த அம்மையார் சசிகலாவிடம் வட்டித் தகராறு செய்து கொண்டு இருக்கிறவர்தான் பழனிசாமி!

அடுத்து என்னமோ பழனிசாமிதான் இந்த உலகத்திலயே ’கடைசி விவசாயி’ போன்று, தனக்கு மட்டும்தான் விவசாயத்தைப் பற்றித் தெரியும் என்பது போன்று பேசிக் கொண்டு இருக்கிறார்… பழனிசாமி அவர்களே… மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளின் வாழ்க்கையில் மண் அள்ளிக் கொட்டுவதற்கு முயற்சி செய்துவிட்டு விவசாயி என்று சொல்ல முடியுமா உங்களால்! பழனிசாமி அவர்களே… நீங்கள் விவசாயி இல்லை… விவசாயிகளை அழிக்க நினைத்த விஷவாயு!

அடுத்து, “உதயநிதி அரசியலுக்கு வந்ததால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்?” என்று கேட்கிறார்… திராவிடத்தின் எதிரிகளையும் – திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத பழனிசாமி போன்ற துரோகிகளையும் - தினமும் இப்படிக் கதற விடுகிறாரே… அதற்குத்தான் வந்திருக்கிறார்!

கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்ற சொல்லும் அளவுக்கு ‘ஜெனரல் நாலேஜ்’ வைத்துக் கொண்டு, “இதெல்லாம் நமக்கு தேவையா? பழனிசாமி…”! சிறிது நாவடக்கத்துடன் பேசுங்கள்! இந்தத் தேர்தலுக்கு உங்கள் பிளான் என்ன? பா.ஜ.க. போட்டுக் கொடுத்த பிளான்படி, பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் தி.மு.க.விற்கு வராமல் தடுக்கத் தனியாக நிற்கிறீர்கள்! உங்களால் அ.தி.மு.க. வாக்குகளையே வாங்க முடியாது… இதில் எப்படி ஓட்டு பிரியும். உங்கள் கட்சிக்காரர்களே, உங்கள் பச்சோந்தித்தனத்தால் நம்பிக்கை இழந்துவிட்டு நிற்கிறார்கள்! இதில் என்ன கொடுமை என்றால், அண்ணா படத்தைக் கொடியில் வைத்துக் கொண்டு – கட்சி பேரில் திராவிடம் என்று வைத்துக் கொண்டு, திராவிடம் என்றால் என்ன என்று விளக்கம் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டு நிற்கிறார். என்னதான் அ.தி.மு.க. நமக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் – நாவலர் நெடுஞ்செழியன் – மதியழகன் போன்றவர்கள் எல்லாம் இருந்த கட்சிக்குப் பழனிசாமி வந்து வாய்த்திருக்கிறார்… கட்சியை மொத்தமாக லீசுக்கு விட்டுவிட்டு மோடியின் ‘B-டீம்’-ஆக இருக்கிறார். அதனால்தான், தமிழ்நாட்டு மக்கள் அவரை நம்புவதற்குத் தயாராக இல்லை! அடுத்தடுத்து தோல்வியைப் பரிசாகக் கொடுத்துப் பழனிசாமியைப் புறக்கணிக்கிறார்கள். ஏன் என்றால், பழனிசாமியின் துரோக வரலாறு, வேர்ல்ட் பேமஸ்!

சி.ஏ.ஏ. சட்டம் வந்தபோது, பழனிசாமி என்ன செய்தார்? நாடாளுமன்றத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது மட்டுமல்ல, ”அதில் எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார்” என்று, அகங்காரமாக பேசி மக்களின் முதுகில் குத்தினார். அதுமட்டுமல்ல, இந்த சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடிய மக்கள் மேல் பெண்கள் குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் லத்தி சார்ஜ் செய்தார். இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடிய, என் மேலும் - மரியாதைக்குரிய ப.சிதம்பரம் - தோழர் பாலகிருஷ்ணன் - வேட்பாளராக இங்கு உட்கார்ந்திருக்கும் சகோதரர் திருமாவளவன் – சகோதரர் ஜவாஹிருல்லா – தம்பி உதயநிதி உள்ளிட்ட எட்டாயிரம் பேர் மேல் ஒரே நேரத்தில் F.I.R. போட்டு மோடிக்கும் – அமித்ஷாவுக்கும், தன்னுடைய விஸ்வாசத்தை வெளிக்காட்டினார் பழனிசாமி! ஆனால், இதற்கெல்லாம் பயப்படாமல், சி.ஏ.ஏ.க்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்தி, இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினோம். அதுமட்டுமா, நாம் ஆட்சிக்கு வந்தவுடன், சி.ஏ.ஏ.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம்! அப்போது பழனிசாமி என்ன செய்தார்? எல்லா அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துக் கொண்டு, அவையை விட்டே ஓடிவிட்டார்! நம்மைப் பொறுத்தவரை, இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு மட்டுமல்ல, பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தார் பழனிசாமி! மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தார். ”எந்த விவசாயி பாதிக்கப்படுகிறார், நான் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன்” என்று உழவர்களின் துயரத்தைப் பார்த்து ஏளனமாக சிரித்தார். அதை மறைக்க, பச்சை துண்டு போட்டு உழவர்களுக்கு பச்சை துரோகம் செய்தார் பழனிசாமி.

இந்தியாவிற்கு எப்படி மோடி இருண்ட ஆட்சியைக் கொடுத்து இருக்காரோ, அது போன்று இருண்ட ஆட்சியைக் கொடுத்தவர் பழனிசாமி!

ஆனால், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு உங்களுக்கான சாதனைகளை செய்யும் அரசு… உங்கள் குடும்பங்களின் தேவையை தெரிந்து ஒவ்வொரு திட்டமாகத் தீட்டி, உதவும் அரசு! கோடிக்கணக்கான தாய்மார்கள் முகத்தில் புன்னகையையும், கோடிக்கணக்கான தமிழ்நாட்டு குடும்பங்களில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

கொஞ்சம் நாளைக்கு முன்பு, என்னுடைய அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. “அன்பு அண்ணன் ஸ்டாலினுக்கு” என்று தொடங்கிய அந்த கடிதத்தில், ”நான் கணவரைப் பிரிந்து வாழ்கிறேன்! சாலை ஓரத்தில் சிறியதாக ஒரு பழக்கடை போட்டு, வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்துகிறேன். ஒரு குழந்தை இருக்கிறது. வீட்டுச் செலவுக்கு கஷ்டப்பட்ட நான், கடந்த சில மாதங்களாகத்தான் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எனக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறது! விடியல் பயணம் பஸ்-இல் இலவசமாகச் சென்று, என்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனை பள்ளியில் விடுகிறேன். அவனுக்குக் காலை உணவும் நீங்கள் கொடுத்துவிடுகிறீர்கள்! இதெல்லாம் பலருக்கும் சிறியதாகத் தெரியலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் இது மிகப்பெரிய உதவி! நீங்கள் நன்றாக இருக்க வேண்டும், நன்றி அண்ணா” என்று எழுதியிருந்தார். இதைவிட என்ன மகிழ்ச்சி வேண்டும் நமக்கு!

உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு, 12,000 ரூபாய்! இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் இதுவரைக்கும் ஒரு கோடியே 15 லட்சம் சகோதரிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! மகளிர் வாழ்வில் மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்திலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெரும் புரட்சி செய்கிறது!

முக்கியமாக, பெருந்தலைவர் காமராசர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம் போன்றே, நம்முடைய குழந்தைகள் காலையில் வெறும் வயிற்றோடு பள்ளிக்கு வரக் கூடாது… அவர்கள் நலமாக இருந்தால்தான், நாடு வளமாக இருக்கும் என்று, இந்த ஸ்டாலின் போட்ட கையெழுத்தால் நாள்தோறும் 16 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சாப்பிடுகிறார்கள்!

தமிழ்நாட்டு மாணவர்கள் திறன்மிக்க இளைஞர்களாக உருவாக வேண்டும்; உலகம் முழுவதும் தமிழர்கள் அறிவாற்றலால் வெல்ல வேண்டும் என நாங்கள் உருவாக்கியிருக்கும், நான் முதல்வன் திட்டத்தால், 28 லட்சம் இளைஞர்கள் இதுவரைக்கும் பயனடைந்திருக்கிறார்கள்.

மகளிர் படிக்கச் செல்ல வேண்டுமா – வேலைக்குச் செல்ல வேண்டுமா - உறவினர்களைச் சந்திக்கச் செல்ல வேண்டுமா - பேருந்தில் கட்டணம் கிடையாது! அதுதான், 445 கோடி முறை, மகளிர் பயணங்கள் மேற்கொண்ட விடியல் பயணம் திட்டம்!

பெண் பிள்ளைகள், அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்குச் செல்கிறார்களா! மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்!

வேலைக்காக வெளியூரில் இருக்கும் பெண்கள், பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ‘தோழி விடுதி திட்டம்!’

மாணவர்களுக்கும் ஆயிரம் வழங்க போகும் தமிழ்ப் புதல்வன் திட்டம்!

விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் மின் இணைப்புகள்!

நம்முடைய திட்டங்கள் பயனாளிகளிடம் முறையே சென்று சேருவதை உறுதி செய்ய, சமீபத்தில் தொடங்கிய “நீங்கள் நலமா” திட்டம்!

இப்படியான நம்முடைய திராவிட மாடல் திட்டங்களை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புதான் இந்த நாடாளுமன்றத் தேர்தல் களம்!

ஆனால், நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடக்கிறது என்பதையே மறந்துவிட்டு, சட்டமன்றத் தேர்தலுக்குப் பேசுவது போன்று பேசுகிறார் பழனிசாமி. மோடியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க – மோடி மேல் தனக்கு இருக்கும் பயத்தை மறைக்க – இன்னும் 24 அமாவாசைதான் இருக்கிறது! பாருங்கள் என்று, ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார். தினமும் காலையில் எழுந்ததும், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு எத்தனை அமாவாசை இருக்கிறது என்று கணக்கு போட்டுக் கொண்டு இருக்கும், அரசியல் அமாவாசைதான் பழனிசாமி! தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் – முதுகில் குத்திய அரசியல் அமாவாசை பழனிசாமி அவர்களே… சட்டமன்றத் தேர்தல் வரட்டும்… அ.தி.மு.க.விடம் இருக்கும் தொகுதிகளையும் சேர்த்தே தி.மு.க. பறிக்கும்! இது உறுதி! இதை ஆணவத்தில் சொல்லவில்லை! தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த – செய்யப் போகும் நன்மைகள்மேல் நம்பிக்கை வைத்து சொல்கிறேன்! மக்களைவிட எனக்கு வேறு துணை கிடையாது என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.

எனவே, ஏப்ரல் 19-ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – அதற்குத் துணைபோகும் பா.ம.க. - தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய துரோகக் கட்சிகளை ஒருசேர வீழ்த்துங்கள்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! உங்கள் எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்.” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com