நீட் தேர்வு மறுதேர்வு முடிவைக் கைவிட வேண்டும்- மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு மறுதேர்வு முடிவைக் கைவிட வேண்டும்- மு.க.ஸ்டாலின்
Published on

நீட் மறுதேர்வு நடத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்றவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடித விவரம்:

“ நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.

இப்படி நடப்பது முதல்முறையல்ல,

2015-ஆம் ஆண்டு, நீட் அறிமுகமாவதற்கு முன் நடத்தப்பட்டு வந்த AIPMT தேர்வில் புளுடூத் சாதனங்கள் மூலம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தப்பட்டது.

2016-ஆம் ஆண்டு நீட் தேர்வின் இரண்டாம் கட்டத்திலும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்தன. ஆனால் அப்போது மறுதேர்வு நடத்தப்படவில்லை.

2017-ஆம் ஆண்டில் ஆள்மாறாட்டப் புகார்கள் எழுந்தன. ஆடைக் கட்டுப்பாடுகள் மூலம் பாகுபாடு காட்டப்பட்டது, மொழிபெயர்ப்புகள் தவறாக இருந்தன. இதனால் தேர்வில் சமவாய்ப்பு கேள்விக்குறியானது.

2020, 2021-ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு பதிலாகப் போலித் தேர்வர்கள் தேர்வெழுதினர். இதன் பின்னணியில் பெரும் படையே இருந்து செயல்பட்டது.

2021-ஆம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வு கவுன்சிலிங்கில் 6 மாதம் தாமதம் ஏற்பட்டு பலரது எதிர்காலம் பாதிக்கப்பட்டது.

2022-ஆம் ஆண்டிலும் திட்டமிட்ட ஆள்மாறாட்ட முறைகேடு அம்பலமாகி, பலரும் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர்.

2024-ஆம் ஆண்டு நீட் தேர்வு மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வாக அமைந்தது. சந்தேகத்துக்குரிய வகையில் நம்ப முடியாத அளவுக்கு அதிக மதிப்பெண்களைச் சிலர் பெற்றது, தன்னிச்சையான கருணை மதிப்பெண்கள் அளித்தது, ஒரே மையத்தில் பல டாப்பர்கள், 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை செலுத்தி வினாத்தாளை முன்பே பெற்றது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. குறைந்தது 155 மாணவர்கள் இந்த மோசடியால் நேரடியாகப் பயனடைந்தனர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக மோசடி நடந்து, சிபிஐ விசாரணை நடத்தியது.

இவற்றுடன், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது போன்ற பிரச்சினைகளும் இத்தேர்வை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கியது. பல தேர்வு மையங்களில் சரியான உட்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இப்படியாக, தொடக்கம் முதலே ஏழை, கிராமப்புற, அரசுப்பள்ளி, தமிழ்வழி பயின்ற, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு இருந்து வருகிறது. தகுதி என்று சொல்லிவிட்டு, பணம் கொழிக்கும் வணிகமாக, பயிற்சி மையங்களால் உந்தப்பட்ட, பணக்காரர்களுக்கான தேர்வாகவே இது இருக்கிறது.

நீட் மூலமாக முளைத்துள்ள பயிற்சி மையத் தொழிலில் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புரளும் அளவுக்கு அது வளர்ந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம் செலவழித்துப் பெறும் சிறப்புப் பயிற்சி இன்றி நீட் தேர்வில் வெற்றி என்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் தலைமுறையாகப் பயிலும் மாணவர்களுக்கு நீட் ஒரு பெரும் தடைக்கல்லாகி இருக்கிறது. அவர்கள் மாநிலப் பாடத்திட்டத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் CBSE பாடத்திட்டத்துக்குச் சாதகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வில் கோச்சிங் இல்லாமல் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு முந்தைய, தமிழ்நாடு அரசின் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை மாடல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தியது. இந்தியாவின் மிக வலிமையான பொது சுகாதார அமைப்பைத் தமிழ்நாட்டில் கட்டமைத்தது இந்த மாடல்தான். நீட் இதனைச் சீர்குலைக்கிறது. நீட் தேர்வு முறை உருவாக்கும் மன அழுத்தத்தால் மாணவர்களின் உயிரும் பறிபோகின்றன.

இதனை நன்கு உணர்ந்ததால்தான், நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்து, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் மாநில உரிமைகள் மீட்கப்பட வலியுறுத்தினேன்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையில், நீட் விலக்குக்காக, 2021-ஆம் ஆண்டும், ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மறுமுறை 2022-ஆம் ஆண்டும் என இரு முறை சட்டம் இயற்றினோம். மாநிலச் சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட அந்தச் சட்டம் மூன்று ஆண்டுகளாகக் குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்து, 2025-ஆம் ஆண்டு ஏப்ரலில், ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்தார். அது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவர் அவர்களின் முடிவினை எதிர்த்து, எனது அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

நீட் மொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும் எனும் எனது கோரிக்கையை மீண்டும் தங்களிடம் வலியுறுத்தும் அதேவேளையில், இந்த ஆண்டு நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால் சில உடனடிச் சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கோருகிறேன்.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019-இன்படி மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையானது நீட் எனும் பொது நுழைவுத் தேர்வின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், தற்போது நிலவும் அசாதாரணச் சூழலில், மீண்டும் நீட் தேர்வினை நடத்தினால், ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு, அது மற்றுமொரு சுமையாகவே அமையும்.

அதனால், 2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை இரத்து செய்து, பள்ளிப் பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அரசுகளே மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டும்.

தற்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், இதற்காகத் தங்கள் அரசு,தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-இன் 14-ஆம் பிரிவினைத் திருத்தி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 123-இன்படி, ஓர் அவசரச் சட்டத்தை இயற்றிட வேண்டும்.

மாண்புமிகு பிரதமர் அவர்கள் எனது இந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற - பிற்படுத்தப்பட்ட - ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திட வேண்டும்.” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com