எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன்... ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி!

ஜி.கே. மணி
ஜி.கே. மணி
Published on

அன்புமணி என்னை துரோகி என்று கூறினால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே. மணி கூறியதாவது: “ஜி.கே. மணிதான் என்னையும் அப்பாவையும் பிரித்துவிட்டார் என அன்புமணி சொல்கிறார். என்னை துரோகி என்று அவர் கூறியது வேதனையாக உள்ளது. நான் அன்புமணிக்கு எந்த வகையிலும் கெடுதலோ, துரோகமோ செய்யவில்லை. அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார்.

அன்புமணி என்னை துரோகி எனக் கூறினால் நானும், என் மகனும் பாமகவை விட்டு வெளியேறி விடுகிறோம். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். அவர் யரையெல்லாம் துரோகி என்று சொகிறாரோ எல்லோரும் வெளியே சென்று விடுகிறோம்.

ராமதாஸ், எனது குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அரசு பணிக்கு போகமாட்டோம் என்று கூறினார். இந்த நேரத்தில், அன்புமணி என்னிடம் வந்து மத்திய அமைச்சர் பதவி கேட்கக் கூறினார். நான் ராமதாசிடம் பேசி, நீங்கள் பதவிக்கு வரமாட்டேன் என்கிறீர்கள். உங்கள் மகனையாவது அமைச்சராக்கலாமே என்றேன். அவர் கடுமையாக என்னிடம் கோபப்பட்டார். நான் செய்த சத்தியம் என்னவாகும் என்றார். கட்சியின் தலைவர் என்ற திமிறில் பேசுகிறாயா என்று என்னிடம் கூறினார்.

அதன்பிறகு, காடுவெட்டி குருவை அழைத்து சென்று மீண்டும் ராமதாசிடம் பேசினோம். அவரும் வற்புறுத்தினார். அதன்பிறகு, அன்புமணியை மத்திய அமைச்சராக்க ராமதாஸ் ஒப்புக்கொண்டார்.

பாமக கூட்டணி குறித்து எந்த தலைவர்களுடனும் நான்தான் பேசுவேன். ஒருமுறை என்னிடம் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நீங்கள்தான் போகவேண்டும் என்று ராமதாஸ் கூறினார். நான் அன்புமணியை பரிந்துரைத்தேன். அவரைத்தான் மாநிலங்களவை உறுப்பினராக்கினோம். ராமதாஸ் பலமுறை சிறைக்கு போனார். அன்புமணி எத்தனை முறை சிறைக்கு போனார். அன்புமணியை யாரும் சந்திக்க முடியவில்லை என்று நிர்வாகிகள் ராமதாசிடம் வந்து சொன்னார்கள். பாமக தனித்து போட்டியிட்டபோது, அன்புமணிதான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இப்படி, அவருக்கு எந்த கெடுதலும் செய்யாத என்னைப்பார்த்து துரோகி, அப்பாவையும், என்னையும் பிரித்துவிட்டார் என்கிறார். அது எப்படி, அப்பாவையும், மகனையும் பிரிக்க முடியுமா? அன்புமணியை பார்க்காதீர்கள் என்று ராமதாசிடம் சொன்னால் அவர் கேட்பாரா? தந்தையை பார்க்காதீர்கள் என்று அன்புமணியிடம் சொன்னால் அவர்தான் கேட்பாரா?

ராதாசும், அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பிரிந்து கிடந்தால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் பேசியதால் தான் பிரச்சினை வெடித்தது. ராமதாஸ் உடன் நான் இருப்பதால்தான் அன்புமணி என்னை வசைபாடுகிறார்.” இவ்வாறு அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com