கோவை பாஷா மரணமடைந்த செய்தி அறிந்து வருத்தம் தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, அந்த வழக்கில் மீதமுள்ள 10 பேரையும் முன்விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ மிகவும் மோசமான வகுப்புவாதப் பதற்றம் தமிழ்நாட்டை 1980 களில் பற்றிக் கொண்டது.
அந்த காலச் சூழலில் ஒரு மதவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் மிக மோசமாக முஸ்லிம்களைப் பற்றி மட்டுமின்றி நபிகளாரைப் பற்றியும் நபிகளாரின் அன்பு மனைவியர்களைப் பற்றியும் பொது மேடையில் கொச்சையாகப் பேசினார்கள்.
இதற்கு ஒரு எதிர் விளைவாக செயல்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் கோவை பாஷா செயல்பட்டார். இதனால் பல விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்க கூடாத சம்பவங்களும் பலதரப்பட்ட மக்களை பாதிக்கக்கூடிய நிகழ்வுகளும் நடந்து முடிந்தன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“ பிறகு அவர் கைது செய்யப்பட்டு வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையில் கழித்தார். பல்வேறு வகையான உடல் நோய்களுடன் சிறைவாசத்தை அவர் அனுபவித்தார். தொடர்ந்து நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
சட்டமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக 2011 முதல் 2016 வரை அதற்குப் பிறகு 2021ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்த பிறகும் இந்த கோரிக்கையை தொடர்ந்து எடுத்து வைத்தோம்.
மனிதநேய மக்கள் கட்சி எடுத்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பாஷா உட்பட 20 பேர்களை முன்விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது.
ஆளுநர் ஆர் என் ரவி 10 பேருடைய பரிந்துரையை மட்டும் ஏற்றுக்கொண்டு எஞ்சிய 10 பேருடைய பரிந்துரையைக் கிடப்பில் வைத்திருக்கிறார்.
இது மாநில அரசின் உரிமைகளை மதிக்காத செயல் ஆகும்.
இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் பிணையில் வெளிவந்தார். முதுமையின் காரணமாக பாஷா அவர்கள் நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார்.
ஆளுநர் அரசின் பரிந்துரையை கிடப்பில் வைத்திருக்கும் எஞ்சிய சிறைவாசிகளையும் இது தவிர இப்போது பலர் பிணையில் இருந்தாலும் கூட நிரந்தர விடுதலையை தரக்கூடிய ஒரு சூழலை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையிலே இது தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து அனைவரும் விடுதலை பெறுவதற்கான வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கடைசிவரை கைதியாகவே மரணிக்கக்கூடிய சூழல் வேறு யாருக்கும் ஏற்படாத வண்ணம் கருணை உள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சர் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் சிறையிலே இருந்து இன்று நம்மை விட்டு பிரிந்து இருக்கின்ற பாஷாவுக்கு மறுமையில் இறைவன் நற்பாக்கியங்களைத் தருவதற்கும் அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் அழகிய பொறுமையை பெறுவதற்கும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றும் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.