சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக சீட்... மேடையிலேயே கோரிக்கை வைத்த உதயநிதி!

சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக சீட்... மேடையிலேயே கோரிக்கை வைத்த உதயநிதி!
Published on

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுங்கள் என திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திமுக தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்ற திமுக இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “இளைஞர்கள் நிறைய கூடினால் கட்டுப்படுத்த முடியாது என்று சொல்வார்கள். ஆனால் நம் இளைஞர் அணியினர் அப்படி இல்லை. கட்டுப்பாடு இல்லாத கூட்டத்தை வைத்து எதையும் சாதிக்க முடியாது.

குஜராத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகாரில் வெற்றி பெற்றுவிட்டோம், அடுத்து எங்களின் இலக்கு தமிழ்நாடு என பேசியிருக்கிறார்.

அமித்ஷாவுக்கும் அவரின் அடிமை கூட்டத்துக்கும் சொல்கிறேன், நீங்கள் எவ்வளவு சீண்டினாலும் மிரட்டினாலும் எங்களின் கருப்பு சிவப்பு படை, இளைஞர் படை களத்தில் தயாராக இருக்கும்.

பல அடக்குமுறைகளை எதிர்கொண்ட இயக்கம் திமுக. கடைசி உடன் பிறப்பு இருக்கும் வரை சங்கி கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

வடநாட்டில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெற்றிருக்கலாம். அது தமிழ்நாட்டில் நடக்காது. பாஜக மதம் பிடித்த யானை என்றால், அதை அடக்க கூடியவராக இருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது மோடிக்கும் தெரியும் அமித் ஷாவுக்கும் தெரியும்.

நேரிடையாக வந்தால் வெற்றி பெற முடியாது என நினைத்து, பழைய அடிமைகளையும் புதிய அடிமைகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு நம்முடன் மோதப்பார்க்கிறார்கள்.

இன்ஜின் இல்லாத கார் தான் அதிமுக. பாஜக என்ற லாரி இன்ஜின் இல்லாத காரை (அதிமுக) எப்படியாவது கட்டி இழுத்துக் கொண்டு போகப் பார்க்கிறது.

நீதித்துறையை, தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். முதலில் அவர் பாஜகவிடமிருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும். அதிமுகவிலிருந்து ஒவ்வொருவராக போய்க் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடிக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன் அடிமையாக இருந்து சுகமாக வாழ்வதை விட சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழ்வதுதான் முக்கியம்.

நாங்கள் நிச்சயம் பாஜகவை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம். அதனால் ஏற்படும் விளைவுகளைக் களத்தில் சந்திப்போம்.

கழக தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். வரும் சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிகமான வாய்ப்புத்தரவேண்டும். இளைஞர் அணிக்குத்தான் தர வேண்டும் என சொல்லவில்லை. இளைஞர்களுக்கு கொடுங்கள்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com