தொகுதி பங்கீடு தொடர்பாக 10 மணிநேரத்துக்கு மேல் ஆலோசனை... சிபிஎம் முடிவு என்ன?

பெ.சண்முகம், சிபிஐஎம் மாநிலச் செயலாளர்
பெ.சண்முகம், சிபிஐஎம் மாநிலச் செயலாளர்
Published on

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் தொடர்பாக சிபிஎம் கட்சியின் மாநில அவசர செயற்குழு கூட்டம் சுமார் 10 மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட சிபிஎம் 2இல் வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 5 இடங்களை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் சிபிஎம் இதனை ஏற்கவில்லை. கடந்த முறை போட்டியிட்டதைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் போட்டியிட்ட 6 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்பது சிபிஎம் நிலைப்பாடு.

இதனை திமுக ஏற்க மறுத்து வருகிறது. இதனையடுத்து சிபிஎம் கட்சியின் அகில் இந்திய பொதுச்செயலாளர் ஏ.எம். பேபி நேற்று சென்னை வந்தார். சென்னையில் சிபிஎம் கட்சியின் மாநில அவசர செயற்குழு நேற்று பகலில் 4 மணி நேரம் நடைபெற்றது. இதன் பின்னர் மாலை 3 மணி முதல் நள்ளிரவைத் தாண்டியும் சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது.

அப்போது, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஒருமித்த கருத்து எட்டப்படாததால், இரவு உணவு இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் மாநில செயற்குழு கூட்டம் சுமார் 2 மணி நேரம் அளவுக்கு நடைபெற்றது.

நள்ளிரவு வரை நடைபெற்ற கூட்டத்தில், கடந்த தேர்தலைப் போல் இந்த முறையும் 6 தொகுதிகளை கேட்டுப் பெற நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து திமுக பேச்சுவார்த்தைக் குழுவை சந்தித்து நிர்வாகிகளின் முடிவை தெரியப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com