வாணியம்பாடி பேருந்து விபத்து
வாணியம்பாடி பேருந்து விபத்து

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி தாய் உட்பட 6 பேர் பலி; 2 குழந்தைகள் தப்பினர்!

வாணியம்பாடி அருகே நடந்த பேருந்து விபத்தில் இரு குழந்தைகளின் தாயாரான பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அந்தப் பெண்ணின் இரண்டு குழந்தைகள் உட்பட 64 பேர் காயம் அடைந்தனர்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு தமிழ்நாடு அரசு சொகுசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4:30 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள செட்டியப்பனூர் கூட்டுச் சாலையில் வந்தபோது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. எதிர்ப்புற உள்ள சாலையில் பாய்ந்தததில், அந்த நேரம் சென்னையிலிருந்து பெங்களூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இவ்விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரும், கிருத்திகா என்ற சென்னைப் பெண்ணும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வாணியம்பாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வழியிலேயே தனியார் பேருந்து ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த சிலர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும், சென்னையைச் சேர்ந்த மற்றொருவரும் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய 2 பேருந்துகளில் பயணம் செய்த 64 பேர் காயம் அடைந்தனர்.

துயரமான இந்த விபத்தில் உயிரிழந்த சென்னை கிருத்திகாவுடன் அவரது 10 வயது மகனும், 7 வயது மகளும் உடன் வந்தனர். அவர்கள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து வாணியம்பாடி காவல்நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com