சிவராஜ் சிங் சவுகான், கமல்நாத்
சிவராஜ் சிங் சவுகான், கமல்நாத்

ம.பி.யில் 71%, சத்தீஸ்கரில் 69% வாக்குப்பதிவு: நக்சலைட் தாக்குதல் ராணுவ வீரர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 70 தொகுதிகளுக்கும் நேற்று சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் 71.11 சதவீதமும், சத்தீஸ்கரில் 68.15 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 64,626 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்பட மொத்தம் 2,533 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்குக் கடந்த 7-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின.

எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நேற்று இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 1.63 கோடி வாக்காளர்களுக்காக 18,833 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 958 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பாதே கோபா வாக்குச்சாவடியில் மாலை வாக்குப் பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் படை வீரர்கள் வாக்கு பெட்டிகளை ஒப்படைக்கும் மையத்துக்கு சென்ற போது, அவர்களை குறிவைத்து நக்சலைட்டுகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தினர். அதில் இந்தோ -திபேத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஜொகிந்தர் சிங் என்பவர் உயிரிழந்தார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் வரும் 25-ஆம் தேதியும், தெலங்கானாவில் 30ஆம் தேதியும் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களிலும் டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com