நேற்று காலை வங்கக்கடலில் உருவான 'முரசு' புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூரில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, காஞ்சிபுரம், வேலூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி உட்பட்ட மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலானது தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூா், நரசாப்பூா் இடையே இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் புயல் கரையைக் கடக்கும்வரை கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் யாரும் கடற்கரைகள், கடலோரச் சாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி ஆகிய கடலோரப் பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றிட சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.