விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!
Published on

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 10ஆம் தேதி இரவு, இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், மறுநாள் (மார்ச் 11) அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி காணாமல் போனது குறித்து புகார் அளித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பதில் அளித்த காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில், குற்றவாளியைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாகத் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனம் ஒன்று சென்றது கண்டறியப்பட்டது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில் சந்தேகிக்கப்பட்ட 5 நபர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாகச் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரர் (30) என்பவரைக் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் இக்கொலைக்கான காரணம் குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவியின் உறவினர்கள் தெரிவித்திருந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த நிலையில் தர்ம முனீஸ்வரனை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட முனீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் குற்றவாளி யார்? குற்றம் நடந்தது எப்படி உள்ளிட்ட விபரங்களை போலீசார் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com