இராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் உட்பட்ட மூன்று பேரும் அடுத்த வாரம் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நளினியின் கணவர் முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் இவ்வழக்கிலிருந்து விடுதலை ஆனபோதும், இவர்கள் இலங்கையர்கள் என்பதால், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முருகன், வெளிநாட்டில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்துவசிக்க விரும்புவதால், விசா பெற முகாம் அடையாள அட்டை வழங்கவேண்டும் என தமிழ்நாட்டு அரசின் இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் துறை இயக்குநருக்கு விண்ணப்பம் செய்தார்.
இதனிடையே, முருகன் உட்பட மூவரும் இலங்கை துணைத் தூதரகத்தில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து நேர்காணலுக்கும் வந்துசென்றனர்.
இந்நிலையில், இன்று உயர்நீதிமன்றத்தில் முருகனின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மூவருக்கும் இலங்கைத் தூதரகம் பாஸ்போர்ட் வழங்கிவிட்டது; அடுத்த வாரம் அவர்களை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது’ அது கிடைத்ததும் அவர்கள் அந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்; இதனால் அடையாள அட்டை வழங்கவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.