இப்போது கூகுளில் நினைத்தபடி செல்போனில் எழுத்துகளை டைப் செய்வதைப் போல இல்லாவிட்டாலும், 40 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் டைப் செய்வதற்கு எளிதாக உதவியது, முரசு அஞ்சல் செயலி. இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு இப்போது பல்வேறு மாற்றங்களுடன் புதிய வடிவம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன் அறிமுக நிகழ்ச்சி முன்னைய வாரங்களில் மலேசியா, சிங்கப்பூரில் நடைபெற்றது. கடந்த 13ஆம் தேதி சென்னையில், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் முரசு அஞ்சலின் புதிய வடிவம் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன், முரசு அஞ்சலை உருவாக்கிய மென்பொறியியலாளர் முத்து நெடுமாறனைப் பற்றிய உரு என்கிற புத்தகமும் வெளியிடப்பட்டது.
முன்னர் தமிழ்த் தட்டச்சுக்கான செயலியாக மட்டுமே இருந்த முரசு அஞ்சல், இப்போது மேம்படுத்தப்பட்டு, எளிதாகத் தட்டச்சு செய்ய சொற்பட்டியல், 5 இலட்சம் சொற்களுக்குப் பொருள் தரும் அகராதி, மெய்யெழுத்து முறையிலான மிக எளிதான புதிய தட்டச்சு விசைப்பலகை என முரசு நேயர்களை ஈர்க்கும் புதிய அம்சங்களோடு வெளியிடப்பட்டுள்ளது.
இடையில், மடிக்கணினி, மேசைக்கணினி, கைப்பேசி என கணினி இணைய யுகங்கள் மாறமாற, அதிலும் ஆப்பிள் மேக் கணினிகள், மைக்ரோசாப்ட் கணினிகள் எனப் பிரிவினை தொடர்ந்தபடி இருந்தாலும், எல்லா நுட்பங்களுக்கும் ஏற்றபடி, முரசு அஞ்சலை வடிவமைத்து மாற்றியமைத்து வருகின்றனர், முத்து நெடுமாறன் குழுவினர்.
கைப்பேசிகள் காலம் வந்தபிறகு, அதற்கான செயலியாக ’செல்லினம்’ உருவாக்கப்பட்டது. அத்துடன் தட்டி எழுதப்பட்ட வாசகங்களைப் படித்துக்காட்டும் ‘சொல்வன்’ எனும் செயலியும் இணைக்கப்பட்டது.
அந்த சொல்வன் அம்சத்தை புதிய முரசு அஞ்சல் செயலியிலும் இப்போது இணைத்திருக்கிறார்கள்.
அறிவித்தபடி, பிற்பகல் 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியபோது, அரங்கு நிறையாவிட்டாலும் சொன்னபடி நிகழ்வை ஆரம்பித்துவிட்டார்கள். (சென்னையில் நிகழ்ச்சி நடத்தும் பெரும்பாலானவர்களும் இப்படிச் செய்வார்களா என உங்கள் மனசுக்குள் ஒரு கேள்வி வந்தால், அது நியாயம்தான். அது நடக்கட்டும்.)
அஞ்சல் செயலியின் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளைப் பற்றி முத்து நெடுமாறன் விரிவாக எடுத்துச்சொன்னார். பின்னர் சிறிய இடைவெளி விட்டு, தமிழ் எழுத்துருக்களின் அழகியல் என்பதைப் பற்றி தனியாக உரையாற்றினார். 1980-கள் முதல் இப்போதுவரை வகை வகையான எழுத்துருக்களை எப்படி உருவாக்கினோம் என்பதை கதைகதையாகச் சொன்னார்.
திரைப்பட சுவரொட்டிகள், பழைய புத்தகங்களின் அட்டையில் உள்ள நூல் தலைப்புகள், கையால் எழுதப்பட்ட பழைய ஆவணங்கள் என பலதரப்பட்ட எழுத்து வடிவங்களிலிருந்து உள்வாங்கிக்கொண்டும், அவற்றைப் போலவும் புதிய எழுத்துருக்களை உருவாக்கிய விதம் குறித்து அந்தத் துறையில் மூழ்கி தோய்ந்து பேசியபடி இருந்தார்.
வந்திருந்தவர்களும் அவர் பேசப்பேச அப்படியே மெய்மறந்து கவனித்தபடி இருந்தனர். நகைச்சுவை இழையோடவும் ஆங்கிலத்தை கவனமாகக் கலப்பில்லாமலும் தேவையான இடங்களில் சீராக ஆங்கிலத்திலும் அவர் பேசியது அனைவரையும் ஈர்த்தது.
இருந்தபோதும் அவரே தொடக்கம் முதல் பேசியதோ என்னவோ இரு பொருள்களில் பேசியபோதும், பார்வையாளர்களை மௌனிக்கச் செய்திருந்தது.
அந்த சூழலையும் கலைத்து தன்னுடைய பாணியில் கலாய்த்து, “இது நல்லா இருக்கு. கைதட்டலாம்..” என அவர் குறிப்பிட, அரங்கில் ஒரே சிரிப்பலைகள். மெய்மறந்துவிட்டோம் என ஒருவர் சொல்ல, ’’ஆமாமாம், முன்னரே இப்படி பார்த்திருக்கிறோம்...” என அவரும் விடாமல் கலாய்க்க, தூக்க நிலைக்குச் சென்றிருந்தவர்கள் கொஞ்சம் விழிப்படைந்தார்கள்.
தான் உருவாக்கிய எழுத்துருக்களுக்கு தமிழில் மட்டுமே பெயரிட்டு வருவதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டிய நெடுமாறன், “ ஒரே எழுத்துருவுக்கு மட்டும் என் ’பாஸ்’ பெயரை வைத்திருக்கிறேன். நிறுவனத்தின் பாஸ் அல்ல, வீட்டுக்கு பாஸ்.” என உள்ளர்த்தத்துடன் பேச... பார்வையாளர் ஒருவர், சாப்பாடு கிடைக்காது என்க, நெடுமாறனும் உற்சாகத்தோடு அதை ஆமோதித்து, “ஆமாம் சாப்பாடு கிடைக்காது... சம்பளம் வேணும்னா கிடைக்கும்...சாப்பாடு கிடைக்காது.” என்றவர், அதைச் சொன்னவரைக் குறிப்பிட்டு, உங்க பெயரையும் அடுத்த எழுத்துருவுக்கு வைத்துவிடலாம் என சுவையாகப் பேசினார்.
நிகழ்ச்சியில், மென்பொறியாளர் வெங்கட்டரங்கன், உரு நூல் பதிப்பாசிரியர் காலச்சுவடு அரவிந்தன், நூல் எழுத்தாளர் கோகிலா ஆகியோரும் பேசினர்.
மூத்த பத்திரிகையாளர் மாலன், வேர்ச்சொல் ஆய்வுமுனைவோரும் மிக மூத்த பொறியாளருமான இராம.கி., ரோஜா முத்தையா நூலக இயக்குநர் சுந்தர், எழுத்தாளர் தமிழ்மகன், தமிழ் ஆசிரியர்கள், ஆர்வலர்கள், எழுத்துரு வடிவமைப்பாளர் நாணா உள்ளிட்ட கணித்தமிழ் ஆர்வலர்கள், மென்பொறியாளர்கள் என நிகழ்ச்சி அரங்கு முழுவதும் நிரம்பியிருந்தது.