மதுரை போலீசின் கொடூரத் தாக்குதல் - மு.வீரபாண்டியன் கண்டனம்

பள்ளி மாணவன் சாவுக்காக நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது காவல்துறை பெண் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டனர்
பள்ளி மாணவன் சாவுக்காக நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது காவல்துறை பெண் அதிகாரிகள் கடுமையாக நடந்துகொண்டனர்
Published on

மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது காவல் துறையினர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

” மதுரை ஆனையூர் கூடல் புதூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற மாணவர் கடந்த ஏழாம் தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார்.

11 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த  மாணவரின் உடல்  முட்புதர்கள் நிறைந்த குட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது கொலையாக இருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறிவருகின்றனர்.

மாணவர் இறந்து ஒரு வார காலம் ஆகியும், அவரது உடலை வாங்க தாயார் யோகலட்சுமி மறுத்துவருகிறார். அவரது மரணத்தைக் கொலைவழக்காகப் பதிவுசெய்ய வேண்டும், மகன் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை கண்டறிந்து, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக காவல்துறை எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்காத நிலையில், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பாக  போராட்டம் உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை காவல்துறையினர் மிக மோசமான முறையில் தாக்கியுள்ளனர்.

சாலையில் தவறி விழுந்த பெண்ணின் கழுத்தைப் பெண் காவலர்கள்  காலால் மிதிக்கின்ற கொடூரமான காட்சி பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

காவல்துறையினரின் இத்தகைய கொடூரமான தாக்குதல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அதுவும் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளே, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.

போராடிய மக்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மாணவரின் மரணத்தைக் கொலைவழக்காகப் பதிவுசெய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com