மின்வெட்டைச் சரிசெய்யாமல் ஜெனரேட்டர் பயன்படுத்தச் சொல்வதா?- பா.ஜ.க. கடும் எதிர்ப்பு

TVK advises to use Generators
ஜெனரேட்டர் பயன்படுத்த அறிவுறுத்திய த.வெ.க.
Published on: 

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்க த.வெ.க. அரசு அறிவுறுத்தியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:

"தமிழகத்தில் இரவு நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் சொந்தமாக ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புதிய ஆட்சி, சிறந்த நிர்வாகம் என வாய்ஜாலம் காட்டிய அரசால், மின் பற்றாக்குறையைக்கூடச் சமாளிக்க முடியவில்லை. முன்கூட்டிய திட்டமிடல் துளியும் இன்றி, தமிழகத்தைத் தொழில் முடக்கத்திற்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கும் த.வெ.க. அரசு தள்ளிவிட்டுள்ளது.

மின்சார வாரியத்தின் மின்சாரம் யூனிட்டுக்கு ₹7 ஆக உள்ள நிலையில், டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு ₹16 முதல் ₹30 வரை உயர்ந்து, தொழிற்துறை பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கோவை, திருப்பூர் உட்பட்ட முக்கியத் தொழில் நகரங்களில் இயங்கும் வார்ப்பகங்கள், பஞ்சாலைகளின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

தொழில்முனைவோருக்குத் துணை நிற்காமல் அவர்கள் தலையிலேயே கூடுதல் நிதிச் சுமையை ஏற்றுவது எவ்வகையிலும் நியாயமற்றது.

எனவே, தவெக அரசு மாற்று வழிகளில் மின்சாரத்தை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற, சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்து, தொழில்துறையினரின் நலனையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று நயினார் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com