3,085 ஏக்கர் கோயில் நிலத்தைத் தாரைவார்ப்பதா?- விஜய்க்கு நயினார் நறுக்!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்
Published on

ரூ.25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா என்று விஜய் அரசுக்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஆலயச் சொத்துகளைச் சூறையாடத் தொடங்கி தங்களின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது. கரூரில் உள்ள 4 முக்கியத் திருக்கோவில்களுக்குச் சொந்தமான ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நோக்கில் அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத்துறை நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

”குறிப்பாக, ஜூலை 9ஆம் தேதியன்று காலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது பரிந்துரைக் கடிதத்தை அனுப்புகிறார்; அதே நாளில் திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரைக் குறிப்பும் வருகிறது; அதே ஜூலை 9-ஆம் தேதியன்றே சென்னையிலுள்ள ஆணையரும் மின்னல் வேகத்தில் தனது இறுதி உத்தரவைப் பிறப்பிக்கிறார். ஒரே நாளில் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள மூன்று முக்கிய அரசுத் துறைகள் இவ்வளவு அசுர வேகத்தில் கோப்புகளை நகர்த்தி இறுதி உத்தரவை வெளியிட்டதன் பின்னணி என்ன? திருக்கோவில் நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் காட்டும் இந்த அசாதாரண வேகத்தை, மக்கள் நலப் பணிகளிலும் ஏழை எளிய மக்களின் தேவைகளிலும் இந்தத் தவெக அரசு காட்ட மறுப்பது ஏன்?

ஆக, திருக்கோவில்களின் சொத்துகளைக் காப்பதாகக் கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோகிறார் அமைச்சர் இரமேஷ். முந்தைய தி.மு.க. ஆட்சியில்கூட அரங்கேறாத இந்த இமாலயத் துரோகத்தை, ஆன்மீகப் போர்வையில் வந்துள்ள விஜய் அரசு மிகத் துணிச்சலாகச் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்வர் விஜய் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும்.” என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com