
சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் நேற்று பேசியபோது, தமிழ் மொழியின் ஆளுமையுடன், கிறித்துவ மதத்தை ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
நிதியமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது பிழைகளோடு வாசித்தார் என்று தி.மு.க.வின் உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் குறிப்பிட்டதற்கு, அமைச்சர் ஆவேசமாக பதில் அளித்தார். அதுகுறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், இவ்வாறு பேசுவது சரிதானா என்று பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
"இன்றைய சட்டமன்றத்தில் உங்கள் மொழியாற்றல் மீதான விவாதத்தின்போது, “எனது மதம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது” என்பதோடு நீங்கள் நிறுத்தியிருந்தால் அது உங்களின் தனிப்பட்ட அனுபவம்.
ஆனால், “எனது மதம் எனக்கு கற்றுக்கொடுத்ததை, எத்தனை தமிழ் படித்தாலும் தெரிந்துகொள்ள முடியாது” என்று நீங்கள் கூறுவது, தமிழின் மீதான தாக்குதலாகத்தான் தெரிகிறது.
“அன்பு” என்ற வார்த்தைக்கு பல மதங்கள் கற்பித்த பல அர்த்தங்களை, "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்ற ஒற்றை வரியில் தூக்கி சாப்பிட்ட மொழிதான் நம் தாய் மொழி தமிழ்.
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைவிட, இரக்கத்தைப் பற்றி இவ்வுலகில் வேறு யாரால் நுட்பமாக எடுத்துரைக்க முடியும்?
“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற புறநானூற்றுப் பாடலை நீங்கள் சரியாகப் படித்து புரிந்திருந்தாலே, “அமைதி” என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் உள்ள ஆழமான அர்த்தம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
பிறப்பால் நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், உணர்வால் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய சட்டமன்றத்தில்கூட உங்கள் கட்சித் தலைவரும் அதைத்தானே சுட்டிக்காட்டினார்? அப்படியிருக்கையில் உங்கள் மதத்தை நீங்கள் உயர்த்திப்பிடிப்பதில் தவறில்லை.
ஆனால், தமிழ் மொழியை நீங்கள் தாழ்த்துவதை ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இன்று உணர்ச்சி மிகுதியில் தமிழ் மொழி மீது வைத்த தவறான விமர்சனத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்." என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.