
நாங்குநேரி கொலை வெறி தாக்குதலுக்கு அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், வடமாநிலத் தொழிலாளி உட்பட இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பத்துக்கு அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதிமுக
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்.
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய விடியா திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள்.
இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.
இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது?
தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது.
வாய்கிழிய மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது; கடும் கண்டனத்திற்குரியது.
பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
தவெக
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி.